புதிய உள்துறைச் செயலரும் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டார்: வெளிநாட்டவர்களுக்கு கட்டுப்பாடுகள்
பிரித்தானியாவில் யார் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றாலும், முதலில் அவர்கள் செய்யும் வேலை, புலம்பெயர்தலுக்கு எதிரானதாகவே இருக்கிறது.
இப்படி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புலம்பெயர்தலுக்கெதிராக எடுக்கும் நடவடிக்கைகள்தான், இன்று நாட்டு மக்களில் சிலரும் புலம்பெயர்ந்தோர் மீது வன்முறையை வெளிப்படுத்தக் காரணமாக உள்ளது என்பது தெரிந்தும் அதையே திரும்பத் திரும்பச் செய்கிறார்கள்.
முன்னாள் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேலும் அதைத்தான் செய்தார், சுவெல்லா பிரேவர்மேன் பொறுப்பேற்றதும் அதைத்தான் செய்தார். பின்னர் ஜேம்ஸ் கிளெவர்லியும் அதைத்தான் செய்தார்.
புதிய உள்துறைச் செயலரும் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டார்
இப்போது லேபர் கட்சி அரசு அமைத்தபின் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றுள்ள Yvette Cooperம் உடனடியாக தனது வேலையைக் காட்டத் துவங்கிவிட்டார்.
புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அடுத்த நடவடிக்கையாக, தகவல் தொழில்நுட்பத் துறை, தொலைதொடர்பு மற்றும் பொறியியல் துறைகளில் பணிக்காக விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கான விசா விதிகளை கடுமையாக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுவருகிறது.
எதனால் இந்த துறைகள் வெளிநட்டுப் பணியாளர்களை நம்பியிருக்கின்றன, எதனால் பிரித்தானியாவின் இந்த துறைகளில் திறன்மிகுப் பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது என்பதைக் கண்டறிய மீளாய்வு ஒன்றை மேற்கொண்டு தனக்கு பதில் தருமாறு புலம்பெயர்தல் ஆலோசனை கமிட்டியைக் கேட்டுக்கொண்டுள்ளார் உள்துறைச் செயலரான Yvette Cooper.
ஏற்கனவே, பிரித்தானியாவின் கட்டுப்பாடுகளால், முதியோர் மற்றும் நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் பணியாளர்கள் வேறு நாடுகளுக்குப் புறப்படத் துவங்கிவிட்டார்கள்.
அந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.
இப்போது தகவல் தொழில்நுட்பத் துறை, தொலைதொடர்பு மற்றும் பொறியியல் துறைகளிலுள்ள பணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தால் பிரித்தானியாவுக்கு மீண்டும் இழப்புதான் ஏற்படும்.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட, பிரித்தானியாவில் வழங்கப்படும் ஊதியத்துக்கு பெரிய அளவில் ஒன்றும் வித்தியாசமில்லை என்கிறார் துறைசார் நிபுணரான Ganapati Bhat என்பவர்.
இப்படியே ஒவ்வொரு துறையிலும் பிரித்தானிய அரசு வெளிநாட்டவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டே இருந்தால், கடைசியில், யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுகொண்ட கதைபோல்தான் ஆகப்போகிறது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |