பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்: முடிவு எடுக்க திணறும் அரசு
பிரித்தானிய உள்துறைச் செயலரின் புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளுக்கு, ஆளுங்கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், அது குறித்து முடிவு எடுக்க அரசு திணறுவதுபோல் தெரிகிறது.
புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்
பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், புதிய புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளார்.

ஐந்து ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி பிரித்தானியாவில் வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் ஷபானா.
ஆனால், பிரித்தானியாவில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட ஏராளமானோர், விரைவில் தங்களுக்கு காலவரையறையின்றி வாழ அனுமதி கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில், ஷபானா அறிமுகம் செய்த புதிய விதிகள் அந்த நிலையை மாற்றியுள்ளதால், கடும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
ஷபானாவின் இந்த புதிய கட்டுப்பாட்டுக்கு ஆளும் லேபர் கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகிவருகிறது.
பிரித்தானியாவின் முன்னாள் துணைப் பிரதமரான ஏஞ்சலா ரெய்னர், ஷபானாவின் இந்த திட்டம் பிரித்தானியாவின் கொள்கைகளுக்கு உகந்தது அல்ல, பிரித்தானியாவில் இப்படி நடக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

நம் நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பைச் செய்த புலம்பெயர்ந்தோரை புதிய கட்டுப்பாடுகள் பாதிக்கக்கூடாது என்று கூறியுள்ளார் ஏஞ்சலா.
ஏற்கனவே போதுமான காலம் பிரித்தானியாவில் வாழ்ந்து, பெரிய அளவில் முதலீடும் செய்தவர்கள், இப்போது தங்கள் எதிர்காலம் குறித்து அஞ்சும் நிலை உருவாகியுள்ளது, ஒருவித நிலையில்லாத்தன்மை உருவாகியுள்ளதால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் திகைத்துப்போயிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் அவர்.
முடிவு எடுக்க திணறும் அரசு
ஏஞ்சலா பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகலாம் என செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அவர் ஷபானாவின் புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் குறித்து விமர்சித்ததைத் தொடர்ந்து, அவற்றை அமுல்படுத்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் யோசிப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், தற்போது அரசு மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், வெளிநாட்டவர்கள் இனி 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே காலவரையறையின்றி பிரித்தானியாவில் வாழ தகுதி பெறலாம் என்னும் புதிய கட்டுப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, ஷபானாவின் புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாட்டுக்கு ஆளும் லேபர் கட்சியிலேயே எதிர்ப்பு உருவாகியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில், அது குறித்து உறுதியான முடிவு எடுக்க அரசு திணறுகிறது என்பதும் தெளிவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |