51 மில்லியன் மக்களுக்கான முக்கிய முடிவை எடுத்துள்ள பிரித்தானியா!
பிரித்தானிய அரசு வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து பெரியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திவிட முடிவெடுத்துள்ளது.
வேகமாக பரவிவரும் கொரோனா வைரசுக்கு மத்தியில் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற பிரித்தானிய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
மூன்றாவது முறையாக தேசியளவில் பூட்டுதலை அமுல்படுத்தியுள்ள பிரித்தானியா, சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கியுள்ளது.
நாளுக்கு நாள் மிக அதிகமான தொற்று பாதிப்புகள் மற்றும் வேகமாகப் பரவிவரும் புதிய உருமாறிய கொரோனா வைரசுக்கு இடையில், பிரித்தானியா கடந்த மாதம் அதன் தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியது.
புதிதாக திறக்கப்படவுள்ள 10 வெகுஜன தடுப்பூசி மையங்கள் உட்பட மொத்தம் 17 வெகுஜன தடுப்பூசி மையங்கள், 1,000-க்கும் அதிகமான பொது மருத்துவர் தலைமைமையிலான மையங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதில் முதற்கட்டமானாக 80 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார பணியாளர்கள், ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சைபெற்று வருபவர்கள் என குறிப்பிட்ட மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்திவந்த அரசு, இன்று முதல் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகளை செலுத்தத் தொடங்குகிறது.
இப்படி படிப்படியாக தடுப்பூசி திட்டத்தில் முன்னேற்றம் அடையும் நிலையில், வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து பெரியவர்களுக்கும் (18வயதுக்கு மேற்பட்டோர்) தடுப்பூசியின் முதல் டோஸை வழங்கிவிட அரசு திட்டமிட்டுள்ளதாக்க NHS தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் 67.5 மில்லியன் மக்கள் தொகையில், 51 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பெரியவர்கள் (18வயதுக்கு மேற்பட்டோர்). இந்த 51 மில்லியன் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது.
அதற்கேற்ப ஆயிரக்கணக்கான மருத்துவ பணியாளர்கள் மற்றும் புதிய தடுப்பூசி மையங்களை பிரித்தானியா தயார் செய்துவருகிறது.