ஆயிரக்கணக்கானோர் வரும் நாட்களில் இறக்கலாம்... பிரித்தானியாவில் திடீரென ஏற்பட்ட அச்சுறுத்தல்
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக வரும் நாட்களில் ஆயிரக்கணக்கானோர் இறக்கலாம் என பிரித்தானியாவில் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கோப்ரா அவசர ஆலோசனை கூட்டத்தினை பிரதமர் போரிஸ் ஜோன்சன் தவறவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
கடும் வெப்பம் காரணமாக மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ள அவசர கூட்டத்தை பிரதமர் போரிஸ் ஜோன்சன் தவிர்த்துள்ளார். பதிலுக்கு, தமது ஆதரவாளர்களுக்கு நன்றி கூறும் விருந்து ஒன்றில் பிரதமர் ஜோன்சன் கலந்துகொண்டுள்ளார்.
பிரித்தானியா மிகக் கடுமையான வெப்பநிலையை எதிர்வரும் நாட்களில் எதிர்கொள்ள இருக்கிறது. திங்கட்கிழமை 40C வெப்பநிலை பதிவாக வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் பாடசாலைகள் இரு நாட்களுக்கு மூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் ரயில் சேவையை பயன்படுத்தவும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். வானிலை ஆய்வு மையமானது முதன்முறையாக தீவிர வெப்பநிலை குறித்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில் ஆரோக்கியமான மக்களுக்கும் கூட கடுமையான நோய் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த அளவுக்கு கடுமையான வெப்பம் பதிவாகாத போதும் கடந்த ஆண்டு மட்டும் வெப்ப அலைக்கு 1,600 பேர் இறந்துள்ளதாக பிரித்தானிய சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே அவசர கோப்ரா கூட்டத்திற்கு பின்னர் கேபினட் அலுவலக அமைச்சர் கிட் மால்ட்ஹவுஸ் தெரிவிக்கையில், மக்கள் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றால், வீட்டிலிருந்து வேலை செய்ய இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றார்.
ஆனால் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகங்களை நாடுவார்கள் என்றே நம்பப்படுகிறது. ரயில் பயணிகள் கண்டிப்பாக, தேவை இருந்தால் மட்டும் ரயில் சேவைகளை பயன்படுத்த கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் லண்டன்வாசிகள் கண்டிப்பாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் பயணங்களை தவிர்க்க வேண்டும் என கோரப்பட்டுள்ளனர்.