கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு
பிரித்தானியாவில் நிலவும் வெப்ப அலையிலிருந்து தப்பிக்க, பச்சிளம் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் உள்ளிட்ட குடும்பங்கள் ஹொட்டல்களில் குளிரூட்டப்பட்ட அறைகளை முன்பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று மடங்காக
சமீப நாட்களில் இதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஹொட்டல் நிர்வாகங்களும் உறுதி செய்துள்ளன. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், ஜூன் 1 ஆம் திகதி முதல், குளிரூட்டப்பட்ட அறைகள் தொடர்பாக பலர் இணையத்தில் தேடியுள்ளனர்.

அதுவும் குளிரூட்டப்பட்ட என்ற வார்த்தை பிரித்தானியா முழுவதும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன், பிரித்தானியாவின் ஹொட்டல் துறை, இந்த ஆண்டு ஜூன் 22 முதல் 25 வரையிலான காலத்தில், 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 34 சதவீத வருவாய் அதிகரிப்பைச் சந்தித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அளவை எட்டிய நிலையில், பிரித்தானியாவில் இதுவரை பதிவான மிக வெப்பமான வாரங்களில் ஒன்றை எதிர்கொண்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இந்த வாரம் கடும் வெப்ப எச்சரிக்கைகளை விடுத்திருந்த நிலையில், பிரித்தானியாவில் வெள்ளிக்கிழமையன்று வாட்டிஷாம் பகுதியில் 36.9 டிகிரி செல்சியஸ் என்ற புதிய ஜூன் மாத வெப்பநிலை சாதனையை தற்காலிகமாகப் பதிவானது.
குளிர்சாதன வசதி
இதனிடையே, பிரித்தானியா முழுவதும் மதுபான விடுதிகள் மற்றும் தங்கும் அறைகளுடன் செயல்படும் Heartwood Inns குழுமம், இந்த வாரம் 86 சதவீதம் வாடிக்கையாளர்களின் பயன்பாடு இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரணைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அந்த நிறுவனம் கண்டுள்ளது; முன்பதிவு செய்வதற்கு முன், வாடிக்கையாளர்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் அறைகளில் குளிர்சாதன வசதி உள்ளதா என்பதையும் விசாரித்துள்ளனர்.

மட்டுமின்றி, பச்சிளம் குழந்தைகள் நிம்மதியாகத் தூங்குவதற்கு ஏற்ற வகையில் தங்கள் வீடுகளைக் குளிர்ச்சியாக வைத்திருக்க முடியாமல் சிரமப்பட்ட பல பெற்றோர்கள், குளிரூட்டப்பட்ட அறைகளைத் தேடும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அந்தக் குழுமம் பதிவு செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |