பிரித்தானியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமுல்! ஹாலிடே ஹாட்ஸ்பாட்கள் அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அமுல் படுத்தியுள்ளன.
பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரபலமான ஐரோப்பிய விடுமுறை தலங்களான ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மால்டா ஆகிய நாடுகள் புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
பிரித்தானியர்களின் மிகவும் பிரபலமான ஹாலிடே இடமான ஸ்பெயின், இந்த வாரத்தின் பிற்பகுதியில் இருந்து பிரித்தானிய பயணிகள் தங்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதை நிரூபிக்க வேண்டும், அல்லது, 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் எதிர்மறையான பி.சி.ஆர் பரிசோதனையை வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அதேபோல், போர்ச்சுகல் அரசு நேற்று பிரித்தானியர்களுக்கு புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில், 12 வயதுக்கு மேற்பட்ட பிரித்தானியர்கள் தங்களுக்கான 2 தடுப்பூசிகளைப் போடாமல் வந்தால், அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மால்டாவும் டீனேஜ் வயதினர் உட்பட முழுமையாக தடுப்பூசி போடாத அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவித்துள்ளது. மால்டா பிரித்தானியாவின் கிரீன் லிஸ்ட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், பிரித்தானியாவை 'கவலைக்குரிய நாடு' (Country of Concern) என தீர்மானிக்கப்பட்டு, அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வர முற்றிலுமாக தடை விதிக்கவேண்டும் என ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் வலியுறுத்திவருகிறார்.
டெல்டா வைரஸிடமிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பாதுகாக்க இதுவே சிறந்த வழி என பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜேர்மனியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.