பிரித்தானியாவில் கத்தியை காட்டி திருட முயன்ற இளைஞர்! கடை உரிமையாளரின் துணிச்சல் செயல்:சிசிடிவி
பிரித்தானியாவின் டர்ஹாம் நகரத்தில் கத்தியை காட்டி திருட முயன்ற நபரை கடை உரிமையாளர் புத்திசாலி தனமாக கடைக்குள் வைத்து பூட்டிய சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
கத்தியை காட்டி திருட முயன்ற நபர்
பிரித்தானியாவின் டர்ஹாம் நகரத்தில் கத்தி முனையை காட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற திருடனை கடை உரிமையாளர் புத்திசாலிதனமாக தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இது தொடர்பாக டர்ஹாம் கான்ஸ்டாபுலரி வெளியிட்ட தகவலில், 30 வயதுடைய மால்கம் ட்ரிம்பிள்(Malcolm Trimble) என்ற இளைஞர் அங்காடிக்குள் கடந்த மாதம் புகுந்து நான்கு பேக் லாகர்-யை(lager) எடுத்துவிட்டு, சட்டையினுள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கடை உரிமையாளரை மிரட்டியுள்ளார்.
ஆனால் கடை உரிமையாளர் எந்தவொரு பதட்டமும் இல்லாமல் கதவை நோக்கி வெளியேறி, திருடனை கடைக்குள் வைத்து பூட்ட முற்பட்டுள்ளார். இதனை உடனடியாக உணர்ந்து கொண்ட கொள்ளையன் மால்கம் ட்ரிம்பிள் கதவை திறக்க போராடுகிறார்.
ஒரு கட்டத்தில் கதவின் பிடியை கடை உரிமையாளர் விட்டுவிடுகிறார், ஆனால் அப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் தப்பிக்க முடியாத நிலையை அடைந்து விடுகிறார்.
3 ஆண்டுகள் சிறை
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்தை வந்து பார்த்த போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மால்கம் ட்ரிம்பிளின் உடல், ஒரு பாதி கடைக்கு உள்ளேயும், மற்றொரு பாதி தெருவிலும் சிக்கிக் கொண்டு இருந்தது.
இதனை தொடர்ந்து மால்கம் ட்ரிம்பிளை பொலிஸார் கைது செய்தனர், அத்துடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அவருக்கு 3 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழங்கிய கருத்தில், மிகவும் எளிதான கைது நடவடிக்கை என தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.