பிரித்தானியாவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பிரித்தானியாவில் 30 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Omicron வகை கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால், பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) திங்கள்கிழமை (டிசம்பர் 13) முதல் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உள்ளூர் மக்களை தங்கள் கோவிட் பூஸ்டர்களை முன்பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளது.
வரும் சில மாதங்களில் Omicron பாதிப்பு எண்ணிக்கை ஆபத்தான முறையில் உயரும் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தொற்று பரவுவதைத் தவிர்க்கவும், தொற்று ஏற்பட்டால் மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும், மருத்துவ நிபுணர்கள் உள்ளூர்வாசிகளை பூஸ்டர் தடுப்பூசியை பெற பரிந்துரைத்துள்ளனர்.
பிரித்தானியாவில் 30 முதல் 39 வயதுக்குட்பட்ட 7.5 மில்லியன் மக்கள் உள்ளனர், அவர்களில் 3.5 மில்லியன் மக்கள் திங்கள்கிழமை முதல் கோவிட் பூஸ்டர் டோஸை பெற தகுதியுடையவர்கள் என்று NHS தெரிவித்துள்ளது.
இப்போது, தகுதியுடைய அனைத்து நபர்களும் இரண்டாவது டோஸ் பெற்ற 61 நாட்களுக்குப் பிறகு (இரண்டு மாதங்கள்) தங்கள் பூஸ்டர் தடுப்பூசியை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய அரசாங்கத்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவின் (SAGE) ஒரு பகுதியான, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & ட்ராபிகல் மெடிசின் (LSHTM) சமீபத்திய அறிக்கையின்படி, ஏப்ரல் மாதத்திற்குள் பிரித்தானியா 25,000 முதல் 75,000 கோவிட் இறப்புகளைப் பதிவு செய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
அதனை தவிர்க்கும் விதமாகவும் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
கடுமையான விதிகள் விதிக்கப்படாவிட்டால், தற்போதைய நிலைமையில் Omicron தொற்று வேகமாக பரவக்கூடும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.