பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
இன்று காலை பிலிப்பைன்ஸ் தீவொன்றை நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்
இன்று காலை, பிலிப்பைன்ஸ் தீவுகளில் ஒன்றான Mindanao தீவை, உள்ளூர் நேரப்படி 7.40 மணியளவில், ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

Mindanao தீவு, பிலிப்பைன்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய தீவும், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட ஏழாவது தீவும் ஆகும்.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஜப்பான், தைவான், பப்புவா நியூகினியா, Palau, Yap மற்றும் அமெரிக்காவின் மேற்கு கரைப்பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் பயணிக்க இருக்கும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் நிலநடுக்கம் தொடர்பில் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் பயணிக்க இருக்கும் பிரித்தானியர்கள், தங்கள் காப்பீடு நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் தொடர்பிலான செலவுகளை ஏற்குமா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் பிரித்தானியர்கள் யாராவது இருப்பார்களானால், அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் பிரித்தானியர்கள் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளின்படி நடந்துகொள்ளவும், கடற்கரை பகுதிகளில் இருப்பவர்கள் உயரமான பகுதிகளுக்குச் செல்லவும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய நில அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும், சேதமடைந்த கட்டிடங்களைத் தவிர்க்குமாறும், உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நிலநடுக்கம் குறித்து என்ன சொல்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ளுமாறும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |