18 நாடுகளுக்கு அவசர பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா
பிரித்தானியா 18 நாடுகளுக்கான அவசர பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது தொடர்பான விவரங்களைஇந்த செய்தியில் காணலாம்.
18 நாடுகளுக்கு அவசர பயண எச்சரிக்கை
பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO), அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய மோதலுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக 18 நாடுகளுக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
மொராக்கோ, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சைப்ரஸ் மற்றும் துருக்கி போன்ற விடுமுறைக்கு பிரபலமான இடங்களும், பாதுகாப்பு கவலைகளை உருவாக்கியுள்ள பிற மத்திய கிழக்கு நாடுகளும் இந்த பயண ஆலோசனையில் அடங்கும்.
ஆலோசனைக்கு உட்பட்ட நாடுகள்
சைப்ரஸ், துருக்கி, எகிப்து, மொராக்கோ, துனிசியா, அல்ஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமன், குவைத், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள், இஸ்ரேல், லிபியா, ஈரான், லெபனான், சிரியா ஆகிய 18 நாடுகள் FCDOவின் பயண ஆலோசனையில் அதிகாரப்பூர்வமாக பட்டியலிட்டுள்ளன.
பிராந்திய மோதல்கள் மற்றும் அதிகரிக்கும் அபாயங்கள்
இந்த அவசர எச்சரிக்கை, ஈரான் இஸ்ரேல் மோதல்களைத் தொடர்ந்து அவை பெருமளவில் வன்முறையாக மோசமடையக்கூடும் என்பதால் விடுக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் அரசியல் ஸ்திரமின்மை, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்புத் தாக்கங்களுடன் திடீர் மற்றும் எதிர்பாராத சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை இந்த ஆலோசனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, மோதல் அண்டை பிராந்தியங்களுக்கும் பரவக்கூடும் என்ற நியாயமான கவலைகள் உருவாகியுள்ளன.
இந்த தொடர்ச்சியான பதற்றம் காரணமாக, பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ராணுவ நடவடிக்கைகள் அல்லது ஒருவேளை பயங்கரவாத தாக்குதல்களில் சிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பயண காப்பீட்டு தாக்கங்கள்
உத்தியோகபூர்வ வழிகாட்டுதலை மீறும் நபர்களுக்கு, செல்லுபடியாகாத பயணக் காப்பீட்டின் சாத்தியம், FCDO இன் ஆலோசனையில் ஒரு முக்கிய அங்கமாகும்.
FCDO எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பதால், திட்டமிடப்படாத வெளியேற்றங்கள் அல்லது மருத்துவப் பிரச்சனைகள் போன்ற நிகழ்வுகளுக்கான நிதிப் பொறுப்பை ஏற்க நேரிடலாம் என சுற்றுலாப்பயணிகள் எச்சரிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் வெளியுறவு அலுவலகத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக பயணிக்க முடிவு செய்தால், அவர்கள் தங்கள் காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பரிசோதித்து பொருந்தக்கூடிய சாத்தியமான கட்டுப்பாடுகளைப் புரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
துருக்கியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன
அங்காராவில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள Kahramankazanஇல் அமைந்துள்ள, துருக்கி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில், அக்டோபர் மாதம் 23ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, துருக்கி கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஐந்து உயிரிழப்புகள் மற்றும் பலருடைய காயங்களுக்கு வழிவகுத்த அந்த தாக்குதல் காரணமாக, துருக்கி விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அங்கு பயணிகள் இப்போது நீண்ட நேரம் காத்திருக்க நேரலாம் என்பதுடன், கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
துருக்கி சென்றுள்ள சுற்றுலாப்பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும், குறிப்பாக அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் இருந்தால், பாதுகாப்புப் புதுப்பிப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் FCDO கேட்டுக் கொண்டுள்ளது.
துருக்கிக்குச் செல்லத் திட்டமிடுபவர்கள், அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும், அதிக ஆபத்துள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறும், அதற்கேற்ற வகையில் தங்கள் பயணத்திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
தகவல்களை அறிந்து கொள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள்
FCDO, நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள FCDOவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் உட்பட பல்வேறு சேனல்கள் மூலம் தகவல்களை அறிந்துகொள்ளுமாறு பயணிகளைக் கேட்டுக்கொள்கிறது.
ஏதேனும் பேரழிவு ஏற்படுதல் முதலான அவசரகால தொடர்புகள் மற்றும் வெளியேற்ற விவரங்கள் உள்ளிட்ட சிறப்பு வழிமுறைகளை FCDO தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருக்கும் என்பதால், பயணிகள் FCDOவின் இணையதளத்தை தவறாமல் பரிசோதித்து மாற்றங்கள் இருந்தால் அறிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |