மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய AI உதவி - உலகின் மிகப்பெரிய ஆய்வை தொடங்கிய பிரித்தானியா
UK Launches Largest AI Breast Cancer Trial: மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய, உலகின் மிகப்பெரிய ஆய்வை பிரித்தானியா தொடங்கியுள்ளது.
மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய AI உதவி
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாகக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக, உலகின் மிகப்பெரிய மருத்துவ ஆய்வை பிரித்தானியா தொடங்கியுள்ளது.
EDITH எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வில் சுமார் 7 லட்சம் பெண்கள் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர்.

இந்த ஆய்வின் கீழ், பிரித்தானியாவின் தேசிய மார்பகப் பரிசோதனைத் திட்டத்தில் சேகரிக்கப்படும் மாமோகிராம் (Mammogram) ஸ்கேன் படங்களை AI தொழில்நுட்பம் ஆய்வு செய்யும்.
இதன் மூலம் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை மனித நிபுணர்களை விட வேகமாகவும் துல்லியமாகவும் கண்டறிய முடியுமா என்பதை ஆராய உள்ளனர்.
10 மில்லியன் பவுண்டு நிதி
இந்த ஆய்வுக்கு 10 மில்லியன் பவுண்டு (சுமார் 13 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதியை பிரித்தானியாவின் தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவனம் (NIHR) வழங்கியுள்ளது. ஆய்வை University of Warwick முன்னெடுத்து வருகிறது. தற்போது Cambridge University Hospitals மருத்துவமனையில் பங்கேற்பாளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய NHS நடைமுறையின்படி, மாமோகிராம் படங்களை 2 நிபுணர்கள் தனித்தனியாக ஆய்வு செய்கின்றனர். புதிய ஆய்வில், ஒரு பிரிவில் AI முதன்மை ஆய்வாளராகவும், மற்றொரு பிரிவில் AI மற்றும் மனித நிபுணர் இணைந்தும் செயல்படுவார்கள். AI மற்றும் மனித நிபுணரின் முடிவுகளில் வேறுபாடு ஏற்பட்டால் அல்லது புற்றுநோய் அதிக வாய்ப்புடன் இருப்பதாக AI எச்சரித்தால், மூன்றாவது நிபுணர் அல்லது சிறப்பு குழு இறுதி முடிவை எடுக்கும்.
இந்த ஆய்வின் முக்கிய நோக்கம், மிகச் சிறிய புற்றுநோய் அறிகுறிகளைக் கூட ஆரம்பத்திலேயே கண்டறிந்து உயிர்களைக் காப்பாற்றுவதாகும். மேலும், ஸ்கேன்களை ஆய்வு செய்ய வேண்டிய நேரத்தைக் குறைத்து, மருத்துவ நிபுணர்களின் பணிசுமையையும் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். பிரித்தானியாவில் பெண்களிடையே அதிகம் கண்டறியப்படும் புற்றுநோய் வகையாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 59,000 புதிய நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பிரித்தானிய சுகாதாரத் துறைச் செயலாளர் Yvette Cooper கூறுகையில், “இது உலகிலேயே மிகப்பெரிய AI மார்பகப் புற்றுநோய் ஆய்வு. நோயைக் கண்டறியும் வேகத்தை அதிகரித்து, உயிர்களைக் காப்பாற்றும் திறன் AI-க்கு உள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |