புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளால் 2024ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களை இழக்கவிருக்கும் பிரித்தானியா
புதிய புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளால், இந்திய மாணவர்கள், கனடாவைத் தொடர்ந்து பிரித்தானியாவையும் நிராகரிக்கும் ஒரு நிலை உருவாகியுள்ளது.
பிரித்தானியா அறிமுகம் செய்யும் கடுமையான கட்டுப்பாடுகள்...
ஏற்கனவே கனடாவில் நிலவும் வாடகை உயர்வு, விலைவாசி முதலான விரும்பத்தகாத சூழல் காரணமாக கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சியடைந்துவருகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்வோரின் எண்ணிக்கையே எக்கச்சக்கமாகிவிட்டது என்று கூறி, புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா சில கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய உள்ளது.
பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி அறிமுகம் செய்துள்ள இந்த மாற்றங்களில், சில 2024 ஜனவரியில், அதாவது, அடுத்த மாதமே நடைமுறைக்கு வருகின்றன.
அதன்படி, முதுகலை ஆராய்ச்சி படிப்பு படிப்பவர் தவிர்த்து, மற்ற சர்வதேச மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வர முடியாது.
மேலும், மாணவர்கள் தங்கள் படிப்பு முடிவதற்குள் வேலை விசாவிற்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களை இழக்கவிருக்கும் பிரித்தானியா
இந்தியா, நைஜீரியா முதலான நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்கிறார்கள். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்தபின், தங்கள் குடும்பத்தினரையும் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லும் நோக்கில்தான் பல மாணவர்கள் கல்வி கற்பதற்கு பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளை தேர்வு செய்கிறார்கள் என்பது பலரும் அறிந்த விடயம்.
அதேபோல, கல்வி விசாவில் பிரித்தானியா செல்லும் பலர், சிறிது காலத்துக்குப் பின் பணி விசாவுக்கு மாறுவதும் நடைமுறையில் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது.
அப்படியிருக்கும் நிலையில், தற்போது பிரித்தானியா அறிமுகம் செய்யும் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள், இந்த இரண்டு விடயங்களையுமே தடை செய்கின்றன.
அப்படியானால், ஏன் மாணவர்கள் பிரித்தானியாவுக்குச் செல்லப்போகிறார்கள்?
இதற்கிடையில், அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவும் ஏற்கனவே சர்வதேச மாணவர்களை தங்கள் பக்கம் ஈர்க்க காத்திருக்கின்றன.
ஆகமொத்தத்தில், பிரித்தானியாவின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளால், இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மாணவர்கள் வேறு நாடுகள் பக்கம் திரும்பப் போகிறார்கள்.
Shiksha
அதுவும், 2024 ஜனவரியிலேயே, பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடையப்போவதாக, கல்வி நிறுவனங்கள் தொடர்பான தரவுகளை ஆராயும் Enroly Data Insights என்னும் இணையதளத்தின் தரவுகள் ஏற்கனவே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |