பிரித்தானியாவின் தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்க லிஸ் ட்ரஸ் திட்டம்: குடிவரவு விதிகளை தளர்த்த முடிவு
பிரித்தானியாவில் தொழிலாளர் பற்றாக்குறையுள்ள வேலை பட்டியலை புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் மதிப்பாய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, புலம்பெயர்ந்தோர் பணி விசாவைப் பெறுவதற்கு உதவும் வகையில் இந்த பட்டியலை விரிவுபடுத்தவுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய (Brexit) பிறகு பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை குறைக்கவும், வணிக வளர்ச்சியை அதிகரிக்கவும் பிரதமர் Liz Truss தனது பணியின் ஒரு பகுதியாக குடியேற்ற விதிகளை தளர்த்தவுள்ளார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை எளிதாக ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் நாட்டின் காலி பணியிடங்களை நிரப்ப, வணிகங்களுக்கு உதவுவதற்காக, அரசாங்கத்தின் (தொழிலாளர்) பற்றாக்குறையுள்ள வேலை பட்டியலை பிரதமர் லிஸ் டிரஸ் விரிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவிற்குள் வர, பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விசா வழங்கப்பட வேண்டும் என்ற தொழில்துறை கோரிக்கைகளை டிரஸ் எதிர்கொண்டார். பல துறைகளில் முதலாளிகள் குரல் கொடுக்கும் முக்கிய கவலைகளில் ஒன்றாக இந்த தொழிலாளர் பற்றாக்குறை இருந்தது.
திறமையான தொழிலாளர்களுக்கான விசா முறையானது தாங்கள் அனுபவித்த பற்றாக்குறைக்கு போதுமான அளவு பதிலளிக்கவில்லை என்று வணிகங்கள் விரக்தியடைந்துள்ளன.
இந்நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரித்தானியாவிற்கு செல்ல அனுமதிக்கும் வழிகளை தாராளமயமாக்க திட்டமிட்டுள்ளார்.