ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
வாழ்க்கையை மொத்தமாக மாற்றப் போதுமான பிட்காயின் தொகுப்பை குப்பையில் வீசியிருக்கலாம் என்று நம்பும் பிரித்தானியர் ஒருவர் தற்போது அதை மீட்டெடுக்கும் வகையில் போராடி வருகிறார்.
குப்பையில் வீசிய பிட்காயின்
வேல்ஸில் நியூபோர்ட் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹோவெல்ஸ். இவர் தொலைத்ததாக கூறப்படும் 8,000 பிட்காயின்களை மீட்டெடுக்க, அதிகாரிகள் இவரை அனுமதிக்க மறுப்பதாக குறிப்பிட்டு தற்போது சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
கவனக்குறைவால் குப்பையில் வீசியதாக கூறப்படும் பிட்காயின்களின் மதிப்பு 569 மில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம் என்றே அவர் நம்புகிறார். 39 வயதான ஜேம்ஸின் முன்னாள் காதலி கவனக்குறைவால் சில கணினி பாகங்களை குப்பையில் வீசியுள்ளார்.
அதில் ஒரு கணினி பாகத்தில் தான் பிட்காயின்களை அவர் சேமித்து வைத்திருந்துள்ளார். குப்பையில் வீசப்பட்ட அந்த பாகங்கள் தற்போது நியூபோர்ட் குப்பைக் கிடங்கில் காணப்பட வாய்ப்புள்ளதாகவே ஜேம்ஸ் நம்புகிறார்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தில், குப்பைகள் அதே கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ளதால், தாம் தொலைத்ததாக கூறும் அந்த கணினி பாகத்தை தம்மால் மீட்டெடுக்க முடியும் என்றே ஜேம்ஸ் கூறுகிறார்.
துபாய் அல்லது லாஸ் வேகாஸாக
மட்டுமின்றி, தற்போது நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துள்ள ஜேம்ஸ், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இன்றைய பிட்காயின் மதிப்பில் சுமார் 569 மில்லியன் பவுண்டுகள் ( இந்திய மதிப்பில் ரூ 6,038 கோடி) இருக்கும் என்றும்,
அதில் 10 சதவிகிதத்தை உள்ளூர் பகுதிக்கு நன்கொடை அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நகர சபை நிர்வாகம் தொடர்ந்து தமக்கு அனுமதி மறுத்து வருவதாக கூறியுள்ள ஜேம்ஸ், நியூபோர்ட் நகரை இன்னொரு துபாய் அல்லது லாஸ் வேகாஸாக மாற்றும் வாய்ப்பை அவர்கள் இழந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை நாடும் எண்ணம் தமக்கு இருந்ததில்லை என தெரிவித்தாலும், நகர சபை நிர்வாகத்தின் இந்த போக்கு தம்மை சட்ட நடவடிக்கை எடுக்க தூண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொலைக்கப்பட்ட பிட்காயின்கள் இன்று அல்லது இன்னொரு நாள் தம்மிடம் சிக்கும் என்றும், அப்போது அதன் மதிப்பு 1 பில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம் என்றார். டிசம்பர் 3ம் திகதி இந்த வழக்கு தொடர்பில் கார்டிஃப் உயர் நீதிமன்றத்தில் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |