இந்திய தம்பதியர் கொலை வழக்கில் பிரித்தானியருக்கு ஆயுள் தண்டனை
பிரித்தானியாவிலிருந்து வந்து இந்தியாவில் வாழும் ஒரு தம்பதியரைக் கொலை செய்த பிரித்தானியக் குடிமகன் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபை உலுக்கிய இரட்டைக் கொலை
2022ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி, இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த சுக்தேவ் சிங் (68), தன் மருமகளான ரூபிந்தர் கௌருடன் தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, கதவு தட்டப்படும் சத்தத்தையும், தன் மாமனார் கதவைத் திறந்து யாரையோ வீட்டுக்குள் அனுமதிப்பதையும், அதைத் தொடர்ந்து பயங்கர அலறல் சத்தத்தையும் மொபைல் மூலம் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார் ரூபிந்தர்.
அதற்குள் யாரோ தொலைபேசி அழைப்பை துண்டிக்க, ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்த ரூபிந்தர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
பொலிசார் கண்ட அதிரவைத்த காட்சி
பொலிசார் சுக்தேவ் சிங் வீட்டுக்குச் சென்ற நிலையில், அங்கு சிங்கும் அவரது மனைவியான குர்மீத் கௌரும் (65) இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துகிடந்திருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்குப் பின் பொலிசார் ரூபிந்தரின் சகோதரரான சரன்ஜீத் சிங் (39) என்பவரைக் கைது செய்துள்ளார்கள்.
நடந்தது என்னவென்றால், சரன்ஜீத் சிங்கின் சகோதரியான ரூபிந்தருக்கும் அவரது கணவரான ஜக்மோஹன் சிங்குக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் இருந்துள்ளன.
அவர்களிடையே சண்டை வர ரூபிந்தரின் மாமனாரும் மாமியாரும்தான் காரணம் என அவர்கள் மீது வெறுப்பு வளர்த்திருந்த சரன்ஜீத் சிங், தன் சகோதரியின் திருமண வாழ்வில் இடையூறு செய்யும் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
அதற்காக, 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனிலிருந்து இந்தியா வந்த சரன்ஜீத் சிங், மூன்று மாதங்களாக நன்கு திட்டமிட்டு, மே மாதம் 4ஆம் திகதி தன் சகோதரியின் மாமனார் மாமியாரான சுக்தேவ், குர்மீத் தம்பதியரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில், திங்கட்கிழமையன்று சரன்ஜீத் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டது.
அத்துடன், ஒரு லட்ச ரூபாய் அபராதமும், ஆயுதம் வைத்திருந்ததற்காக கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |