நீல நிற தோலுடன் மருத்துவமனைக்கு வந்த நபர்... பதறிய மருத்துவர்கள்: ஒரு சுவாரஸ்ய செய்தி
பிரித்தானியாவில், நீல நிறத் தோலுடன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார் ஒருவர்.
அவரைக் கண்டதும் பதறிய மருத்துவர்கள், உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கத் துவங்கினார்கள்.
நீல நிற தோலுடன் மருத்துவமனைக்கு வந்த நபர்
டாமி லின்ச் (42) என்னும் பிரித்தானியர், காலையில் கண் விழித்தபோது தன்னுடைய தோல் முழுவதும் நீல நிறமாக மாறியுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

முதியவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணி செய்யும் தனது நண்பர் ஒருவரை டாமி உதவிக்கு அழைக்க, டாமியைப் பார்த்த அந்த நண்பர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
நோயாளி நீல நிறத் தோலுடன் இருப்பதைக் கண்டதும் பதறிய மருத்துவர்கள், அவரது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டதாக எண்ணி உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
இதற்கிடையில், அவருக்கு ஊசி மூலம் மருந்தைச் செலுத்துவதற்காக, அவரது கையை ஸ்பிரிட்டில் நனைத்த பஞ்சு மூலம் ஒரு மருத்துவர் துடைக்க, உடனே பஞ்சு நீல நிறமாக, அவரது கையைக் கவனித்த மருத்துவர் விழுந்து விழுந்து சிரிக்கத் துவங்கியுள்ளார்.
டாமி திகைக்க, அந்த மருத்துவர் விடயத்தை விளக்கியபோதுதான் அனைவருக்கும் உண்மை தெரியவந்துள்ளது.
நடந்தது என்ன?
நடந்தது என்னவென்றால், டாமிக்கு ஒரு நண்பர் நீல நிற போர்வைகளை பரிசாக கொடுத்துள்ளார்.

அந்த போர்வைகளை துவைக்காமலே டாமி பயன்படுத்த, அவை சாயம் போக, அதிலுள்ள நீல நிறம் டாமியின் தோலில் ஒட்டிக்கொள்ள, விடயம் தெரியாமல் டாமி மருத்துவமனைக்கு வர, மருத்துவர்களுக்கு இந்த விவரம் எல்லாம் தெரியாததால் பெரும் பரபரப்பாகிவிட்டது.
பின்னர் விடயம் தெரிந்து மருத்துவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்ததுடன், இப்படி நீல நிறத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட ஒருவர் ஆரோக்கியமாக வீடு திரும்பியதை நாங்கள் பார்த்ததே இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
போர்வையால் தான் நீல நிறமாக மாறியதை அறிந்து மருத்துவர்கள் கோபப்படுவார்களோ என டாமி நினைக்க, அவர்களோ, மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இப்படி வேடிக்கையான விடயங்கள் நடப்பதில்லை என்று கூறி சிரித்துள்ளார்கள்.
வீடு திரும்பிய டாமி தினமும் குளியல் போட்டும், அவரது தோலிலிருந்த நீல நிறம் மாற ஒரு வாரத்துக்கு மேல் ஆனதாம்.
அவதார் திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் போல் ஆகிவிட்டேன் என்று கூறி சிரிக்கும் டாமி, முதல் வேலையாக அந்த நீல நிறப் போர்வைகளை துவைத்துவிட்டேன் என்கிறார்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |