புலம்பெயர்ந்தோருக்கு எதிராக சமூக ஊடகத்தில் மோசமாக செய்தி: பிரித்தானியருக்கு சிறை
புலம்பெயர்ந்தோருக்கு எதிராக சமூக ஊடகத்தில் மோசமாக செய்தி வெளியிட்ட பிரித்தானியர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியருக்கு சிறை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஜேர்மனியின் Magdeburg நகரில், கிறிஸ்துமஸ் சந்தை ஒன்றில் நபர் ஒருவர் வேண்டுமென்றே கார் ஒன்றைக் கொண்டு மக்கள் கூட்டத்தில் மோதியதில் 6 பேர் கொல்லப்பட்டார்கள், 338 பேர் காயமடைந்தார்கள்.

அந்த தாக்குதலுக்கு எதிராக, ஜேர்மன் மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணிகள் நடத்தினார்கள்.
அது தொடர்பில் சமூக ஊடகம் ஒன்றில் ஒரு இடுகை வெளியாக, பிரித்தானியரான லூக் (Luke Yarwood, 36), அந்த இடுகைக்குக் கீழே, ’புலம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் ஹொட்டல்களுக்குச் செல்லுங்கள், அவற்றைக் கொளுத்தி தரைமட்டமாக்குங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, ’இது பிரித்தானியர்கள் ஒன்று திரளும் நேரம் என்று நான் நினைக்கிறேன், திரளுங்கள், கொல்லுங்கள், வன்முறையும் கொலையும்தான் ஒரே தீர்வு, புலம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் ஒவ்வொரு ஹொட்டலையும் கொளுத்துங்கள், அதற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் செல்வோம்’ என்றும் மற்றொரு இடுகையில் குறிப்பிட்டிருந்தார் லூக்.
அத்துடன், வெளிநாட்டவர்களுக்கு எதிராக, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக, ஆங்கிலம் பேசாதவர்களுக்கு எதிராக, என புலம்பெயர்ந்தோருக்கு எதிராக, வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் வகையில் இடுகைகள் வெளியிட்டிருந்தார் லூக்.

ஆகவே, அவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.
ஆனால், அவரது இடுகைகள் வெறும் 33 பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளதாகவும், அவற்றால் உண்மையான பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும் அவரது சட்டத்தரணி வாதம் முன்வைத்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, லூக் வெளியிட்ட இடுகைகள் இனவெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த இடுகைகள் வெறும் 33 பார்வைகளை மட்டுமே பெற்றிருந்தாலும், லூக் இதே காலகட்டத்தில் வெளியிட்ட சில இடுகைகள் 800 பார்வைகள் வரை பெற்றுள்ளதாகவும், அவர் செய்தி ஒன்றுக்கு அளித்த பதில், ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்த நீதிபதி, அவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |