6500 கிலோ மீற்றர் புனித நடைபயணம் மேற்கொண்ட பிரித்தானியர்! கூறிய காரணம்
பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், ஹஜ் புனித பயணத்திற்காக 6500 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றுள்ளார்.
ஈராக்-குர்திஷ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியர் ஆடம் முகமது (52). இவர் மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
ஆனால், வாகனங்களில் செல்லாமல் பிரித்தானியாவில் இருந்து நடைபயணமாக செல்ல திட்டமிட்ட ஆடம், கடந்த ஆண்டு ஆகத்து மாதம் 1ஆம் திகதி தனது பயணத்தை தொடங்கினார்.
அவர் நெதர்லாந்து, ஜேர்மனி, அவுஸ்திரியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக பயணித்து இறுதியில் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவை அடைந்தார்.
இந்த தூரத்தை அவர் 10 மாதங்கள், 25 நாட்களில் கடந்தார். வழியில் அவர் ஒலிப்பெருக்கி வைத்த வண்டியை தள்ளிக்கொண்டே அமைதி மற்றும் சமத்துவ கருத்துக்களை பரப்பி வந்தார். ஒரு நாளைக்கு 17.8 கிலோ மீற்றர் பயணம் செய்த ஆடம், இந்த பயணம் தனது ஆன்மா தேடலின் விளைவு எனக் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'நான் இதை எல்லாம் வெறும் புகழுக்காகவோ, பணத்திற்காகவே செய்யவில்லை. நம் இனம், நிறம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மனிதர்கள் அனைவரும் சமம் என நமது மதமான இஸ்லாம் போதிப்பதை, இந்த உலகுக்கு எடுத்துரைக்க தான் செய்தேன். வழியில் மக்கள் என் மீது பொழிந்த அத்தனை அன்பையும் கண்டு நெகிழ்ந்து போனேன்' என தெரிவித்துள்ளார்.