இது இனவெறி அல்ல- பிரித்தானியாவில் குடியேற்றத்தை குறைக்க உள்துறை செயலாளர் யோசனை
பிரித்தானியாவில் குடியேற்றத்தைக் குறைக்க உள்துறை செயலாளர் சுயெல்லா பிராவர்மேன் யோசனை கூறியுள்ளார்.
உள்ளூர் மக்களுக்கு பயிற்சி- சுயெல்லா பிராவர்மேன் யோசனை
லண்டனில் நேற்று (திங்கட்கிழமை) நடந்த தேசிய பழமைவாத மாநாட்டில் (National Conservatism Conference) பேசிய உள்துறை செயலாளர் சுயெல்லா பிராவர்மேன் (Suella Braverman) பிரித்தானியாவில் குடியேற்றத்தை குறைக்க, கனரக லொறி ஓட்டவும், பழங்களை பறிக்கவும் மற்றும் இறைச்சிகளை வெட்டவும் சொந்த மக்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். இந்த யோசனையை நிராகரிக்க எந்த நல்ல காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், பிரித்தானியா "உயர் திறமையான, உயர் ஊதிய பொருளாதாரத்தை உருவாக்க அனுமதிக்கும் வகையில், குறைந்த திறன் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களையே குறைந்த அளவிலேயே சார்ந்து இருக்கும்" என்று பிரேவர்மேன் பிரதிநிதிகளிடம் கூறினார்.
PA Media
'இனவெறி அல்ல'
அந்த வகையில், ஒரு நாடு தனது சொந்த எல்லைகளைக் கட்டுப்படுத்த விரும்புவது "இனவெறிச் செயல் அல்ல" என்று அவர் கூறினார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து நாட்டில் தோட்டக்கலைத் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த பற்றாக்குறை கோவிட்-19 தொற்றுநோயால் மேலும் தீவிரமடைந்தது.
AFP
சமீப ஆண்டுகளில் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க சில துறைகளில் விசா விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன அல்லது சரிசெய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் பருவகால விவசாயத் தொழிலாளர்களுக்கான தற்காலிக விசாக்களையும் 15,000 அதிகரித்துள்ளது.
முன்னதாக, கன்சர்வேடிவ் கட்சியினர் ஒரு வருடத்தில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 100,000-க்கும் கீழே குறைக்க உறுதியளித்தனர். ஆனால் இந்த ஆண்டு, இது 700,000 என்ற சாதனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.