ரஷ்யாவால் அச்சுறுத்தல்... பிரித்தானிய பாதுகாப்புப்படைத் தலைவர் எச்சரிக்கை
UK military chief issues stark warning over Russian threat: ரஷ்ய அச்சுறுத்தல் தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்புப்படைத் தலைவர் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவால் உண்மையாகவே அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய பாதுகாப்புப்படைத் தலைவர், அதை எதிர்கொள்வதில் தன் சக ஐரோப்பிய கூட்டாளர்களைவிட பிரித்தானியா பின்தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பாதுகாப்புப்படைத் தலைவர் கூறும் செய்தி
பிரித்தானிய பாதுகாப்புப்படைத் தலைவரான சர் ரிச்சர்ட் நைட்டன் (Sir Richard Knighton), எனக்குத் தெரிந்தவரையில், என் வாழ்வில், என் அனுபவத்தில், இது மிக ஆபத்தான காலகட்டம் என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவால் அச்சுறுத்தல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று கூறியுள்ள சர் ரிச்சர்ட், சதி வேலைகள், சைபர் தாக்குதல்கள், குறிவைத்து தாக்குதல் என ஐரோப்பாவிலும், சிறிதளவில் பிரித்தானியாவிலும், பலவகையில் ரஷ்யா தாக்குதல்கள் நிகழ்த்திவருவது குறித்து நம்மிடம் ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
தி இண்டிப்பென்டண்ட் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள சர் ரிச்சர்ட், உக்ரைன் மீதான ரஷ்யப் போர், நாமும் தயாராக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

அத்துடன், இது போருக்காக தயாராவதைக் குறித்த விடயம் அல்ல, போரை தவிர்ப்பது குறித்தது என்றும், பலவீனம் ஆக்கிரமிப்பை வரவழைக்கும், ஆனால், வலிமை அமைதியை பாதுகாக்கும் என்பதை வரலாறு பலமுறை காட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், அரசு அறிவித்தபடி, தானும், அவசர கால தேவைகளுக்காக, தேவையான தண்ணீர் மற்றும் உணவுப்பொருட்களை சேமித்துவைத்துள்ளதாகவும் சர் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.