கருவில் இறந்த குழந்தை: பிரித்தானிய தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி
பிரித்தானியாவில், கருவிலேயே உயிரிழந்த தன் குழந்தையின் அஸ்தியை மூன்று ஆண்டுகளாக பத்திரமாக வைத்திருந்தார் தாய் ஒருவர்.
ஆனால், அவர் வைத்திருந்தது அவரது குழந்தையின் அஸ்தி அல்ல, அது ஒரு விலங்கின் அஸ்தி என தெரியவந்ததால் பேரதிர்ச்சிக்குள்ளானார் அவர்.
கருவில் இறந்த குழந்தை
இங்கிலாந்தில் வாழும் லூசி நெஸ் (Lucy Ness, 28) என்னும் இளம்பெண்ணின் குழந்தை, 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி, அவரது கருவிலேயே உயிரிழந்துவிட்டது.

தங்கள் குழந்தையின் உடலை லூசியும் அவரது கணவரான கால்லம் எல்லெர்பியும் (Callum Ellerby), இங்கிலாந்தின் Hull என்னுமிடத்திலுள்ள Legacy Independent Funeral Directors Ltd என்னும் இறுதிச்சடங்கு மையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
மே மாதம் 10ஆம் திகதி, குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கூறி, 11ஆம் திகதி, அஸ்திக்கலசம் ஒன்றை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர் இறுதிச்சடங்கு மைய அலுவலர்கள்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம், லூசியின் குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த இறுதிச்சடங்கு மையத்தில் ஒரு பெரிய பிரச்சினை கண்டறியப்பட்டது.
அதிரவைத்த காட்சி
ஆம், அந்த இறுதிச்சடங்கு மையத்தில், 30க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படாமலே வைக்கப்பட்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்ற பொலிசார் கண்ட காட்சி அவர்களை அதிரவைத்துள்ளது. ஆம், அங்கு ஏராளமான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளன. அவற்றில் பல அழுகத்துவங்கியிருந்திருக்கின்றன.
அத்துடன், அங்கு சுமார் 100 அஸ்திக்கலசங்களும் இருந்துள்ளன.
பிரித்தானிய தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி
இந்நிலையில், லூசியும் தன் குழந்தையும் அந்த இறுதிச்சடங்கு மையத்தில்தான் தகனம் செய்யப்பட்டது என்பதால் அது குறித்து விசாரித்துள்ளார்.
அவருக்கு கிடைத்த தகவல் அவரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆம், அவரிடம், அவரது குழந்தையின் அஸ்தி என ஒப்படைக்கப்பட்ட அஸ்தி, ஏதோ ஒரு விலங்குடைய அஸ்தி, அதாவது, ஒரு செல்லப்பிராணியின் அஸ்தி என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
தாங்கள் இதுவரை தங்கள் குழந்தையின் அஸ்தி என நினைத்து பாதுகாத்து வைத்திருந்தது ஒரு விலங்கின் அஸ்தி என தெரியவந்ததால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள் லூசி, கால்லம் தம்பதியர்.
இந்நிலையில், அந்த இறுதிச்சடங்கு மைய இயக்குநரான ராபர்ட் புஷ் (48) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |