ஆங்கிலக்கால்வாயில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்த அதிர்ச்சி
ஆங்கிலக்கால்வாயில் பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்றை சந்திக்க நேர்ந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்த அதிர்ச்சி
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ் பிலிப், பிரித்தானியாவின் நிழல் உள்துறைச் செயலராகவும் உள்ளார்.

இந்நிலையில், புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது தொடர்பில், ஆங்கிலக்கால்வாயில் படகொன்றில் பயணித்தவண்ணம் பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்திருக்கிறார் பிலிப்.
அப்போது, அவ்வழியாக பிரெஞ்சு கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று சென்றுள்ளது.
சற்று நேரத்தில், யாரோ துப்பாக்கியால் சுடும் சத்தத்தை பிலிப்பும் அவரை பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பிபிசி ஊடகவியலாளரான மைக்கேல் கியோஹனும் கேட்டுள்ளார்கள்.
17 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும், அந்த போர்க்கப்பலில் பிரெஞ்சு வீரர் ஒருவர் கடலை நோக்கி துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நிற்பதை தான் கவனித்ததாகவும், துப்பாக்கி சுடும் சத்தம் அங்கிருந்துதான் வந்ததாக தான் கருதுவதாகவும் கியோஹன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாங்கள் புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது தொடர்பில் செய்தி சேகரிப்பதால், அதை நிறுத்துவதற்காக பிரான்ஸ் மேற்கொண்ட ஒரு மிரட்டல் தந்திரமாக அது இருக்கலாம் என்கிறார் பிலிப்.
அந்தப் பகுதியில் போர்ப்பயிற்சி எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின், அது தங்களை மிரட்டுவதற்காக அல்லது எச்சரிப்பதற்காகத்தான் இருக்கக்கூடும் என தான் நம்புவதாக பிலிப் தெரிவித்துள்ள நிலையில், அதையே கியோஹனும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |