எலான் மஸ்க்கின் xAI மீது பிரித்தானிய எம்.பி. வழக்கு., Grok உருவாக்கிய சர்ச்சையான படங்கள்
பிரித்தானியாவின் லேபர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜெஸ் அசாடோ, எலான் மஸ்க் நிறுவிய xAI நிறுவனத்திற்கு எதிராக லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Grok எனும் AI சாட்பாட், அவரை குறிவைத்து போலியான படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அசாடோவின் கூற்றுப்படி, கடந்த மாதம் சிலர் Grok-ஐ பயன்படுத்தி, அவரை “மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறைக்கு தயாராக்கும்” போலியான வீடியோவையும், பல பாலியல் படங்களையும் உருவாக்கினர்.
இது அவர் எலான் மஸ்க் மற்றும் Grok குறித்து பொதுவாக விமர்சித்த பிறகு நடந்ததாக கூறப்படுகிறது.

அவர் தாக்கல் செய்த வழக்கில், தனியுரிமை மீறல் மற்றும் தரவு பாதுகாப்பு சட்டம் மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன. Grok-இன் வடிவமைப்பு மற்றும் பயிற்சி முறைகள், இப்படியான பாலியல் உள்ளடக்கங்களை உருவாக்க அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அசாடோவின் வழக்கறிஞர்கள், Grok-ஐ நிரந்தரமாக இப்படியான படங்களை உருவாக்க முடியாத வகையில் தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இது நிறைவேற்றப்பட்டால், உலகளாவிய AI நிறுவனங்களுக்கு புதிய சட்ட முன்னுதாரணமாக அமையும்.
எலான் மஸ்க், பிரித்தானியாவின் ஓன்லைன் பாதுகாப்பு சட்டங்களை “கருத்துரிமையை கட்டுப்படுத்தும்” முயற்சி என விமர்சித்துள்ளார். ஆனால், Grok ஏற்கனவே பல நாடுகளில் அனுமதியில்லாத பாலியல் படங்களை உருவாக்கியதாக விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.
இந்த வழக்கு, AI தொழில்நுட்ப வளர்ச்சியில் தனியுரிமை பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ பொறுப்பு குறித்து உலகளவில் முக்கியமான விவாதத்தை தூண்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |