பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இனி பிரான்சுக்கு பணம் கொடுக்கக்கூடாது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
பிரான்சுக்கு கொடுக்கப்படும் பெரும் தொகை
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரை பிரான்சிலேயே தடுத்து நிறுத்துவதற்காக பிரான்சுக்கு பிரித்தானியா பெரும் தொகை ஒன்றைக் கொடுத்துள்ளது.

இருந்தாலும் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.
புதன்கிழமை மட்டுமே, 752 புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், இப்படி சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் புறப்படுவதைத் தடுக்காமல், பிரான்ஸ் பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை பிரித்தானிய ஊடகவியலாளர்கள் கண்ணால் பார்த்துள்ளார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
இந்நிலையில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளார்கள்.

ரீஃபார்ம் கட்சி கருவூல செய்தித்தொடர்பாளரான ராபர்ட் ஜென்ரிக், பிரான்ஸ் பொலிசார், சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் புறப்படுவதைத் தடுக்காமல் அவர்களை கையசைத்து அனுப்பி வைக்கிறார்கள்.
பொறுத்தது போதும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது, சொல்லப்போனால், இதுவரை கொடுத்த பணத்தை பிரான்சிடம் திருப்பிக் கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
அதேபோல, நிழல் உள்துறைச் செயலரான கிறிஸ் பிலிப்பும், பெல்ஜியம் நாட்டு அதிகாரிகள் வெற்றிகரமாக சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துகிறார்கள்.

அதேபோல் பிரான்ஸ் அதிகாரிகளும் செய்யவேண்டும் என்று கூறியுள்ள பிலிப், அப்படிச் செய்ய பிரான்ஸ் மறுத்தால், நம் பிரதமர் ஆன்டி பர்னாம், பிரான்சுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பிரான்சுக்கு பிரித்தானியா புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் 160 மில்லியன் பவுண்டுகள் கொடுப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியா வரும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே அந்த 160 மில்லியன் பவுண்டுகள் கொடுக்கப்படும் என உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |