மூன்று நாட்கள் பிரித்தானியா ஸ்தம்பிக்கும்: மிகப்பெரிய வேலை நிறுத்தம்
பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான ரயில் ஊழியர்கள் இந்த மாதத்தில் மூன்று நாட்கள் மிகப் பெரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் 1989-கு பின்னர் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் மிகப்பெரிய வேலை நிறுத்தம் இதுவாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஊதிய உயர்வு தொடர்பில் முன்னெடுக்கப்படும் இந்த வேலை நிறுத்தமானது ஜூன் மாதம் 21, 23 மற்றும் 25ம் திகதிகளில் முன்னெடுக்கப்படுகிறது.
Network Rail மற்றும் 13 வேறு சேவைகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது. மேலும், லண்டன் சுரங்க ரயில் சேவைகள் ஜூன் 21ம் திகதி 24 மணி நேரத்திற்கு ஸ்தம்பிக்கும் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
வேலை உறுதி மற்றும் ஓய்வூதியம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் இந்த 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் பயணிகளுக்கு மேலதிக குழப்பத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
மூன்று நாள் வேலை நிறுத்தத்தில், முதல் நாளில் 50,000 ஊழியர்கள் பங்கேற்பார்கள் எனவும் எஞ்சிய இரு நாட்களில் தலா 40,000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபாடுவார்கள் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வேலை நிறுத்தத்தில், Chiltern Railways, Cross Country Trains, Greater Anglia, LNER, East Midlands Railway, c2c, Great Western Railway, Northern Trains, Southeastern, South Western Railway, Transpennine Express, Avanti West Coast மற்றும் West Midlands ரயில் சேவைகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் எங்களால் முடிந்த முயற்சிகள் இருந்தபோதிலும், ரயில்வே ஊழியர்கள் பரிதாபமாக நடத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார் RMT பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச்.
விலைவாசி உயர்வால் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இரயில்வே ஊழியர்கள் தங்கள் வேலையை இழப்பதையோ அல்லது மற்றொரு வருட ஊதிய முடக்கத்தை சந்திப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மிக் லிஞ்ச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரயில் சேவை நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தது 500 மில்லியன் பவுண்டுகள் வரையில் இலாபம் பார்க்கிறார்கள். மட்டுமின்றி, கொரோனா காலகட்டத்தில் இரயில்வே சேவைகள் முடங்கி இழப்பு ஏற்பட்டதாக கூறி அதன் தலைவர்கள் பல மில்லியன் பவுண்டுகள் இழப்பீடாகவும் பெற்றுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு பின்னர் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மக்களின் மன நிலை மாறிவிட்டது, அதனால் இரயில் சேவையை நவீனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.