பிரித்தானியாவிற்கு 10 நாட்கள் ஊரடங்கு தேவை! எச்சரிக்கும் நிபுணர்கள்
பிரித்தானியாவில் வேகமெடுத்து வரும் ஒமைக்ரான பரவலை தடுக்க வேண்டும் என்றால் 10 நாட்கள் ஊரடங்கு தேவை என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
கடந்த செவ்வாய் கிழமை(07.12.2021) ஒமைக்ரான் பாதிப்பு 633-ஆக இருந்த நிலையில், அது 90 சதவீதம் அதிகரித்து நேற்று வரை(15.12.2021) இதன் பாதிப்பு 10,017-ஐ தொட்டது.
இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து, அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பொதுவாக தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று 78,000-பேர் என்ற புதிய உச்சத்தை தொட்டது.
இந்நிலையில், ஒமைக்ரான் பரவலை தடுக்க பப்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படுவதற்கான அறிவிப்புகள் அமுலுக்கு வர வேண்டும் என்று , Independent SAGE(பிரித்தானியாவின் அவசரநிலைகளுக்கான சுயாதீன அறிவியல் ஆலோசனைக் குழு), அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்றால், 10 நாட்கள் ஊரடங்கு தேவை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து Indie SAGE வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்துமஸ் துவக்க நாள் முதல் 28-ஆம் திகதி வரை சில வரையறுக்கப்பட்ட விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும், நிலைமை மிகவும் அவசரமானது, நாம் இப்போது அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்புகளை குறைக்க வேண்டிய நேரம் இது.
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
- விடுதிகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட வேண்டும்
- கொரோனாவால் பாதிக்கபட்ட புதிய நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்
- பள்ளிகளை மூட வேண்டும்
- மூன்றாவது தடுப்பூசி பிரச்சாரம் தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஊரடங்கு விதிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பது போல் பேசினார். வழக்கம் போல் அனைத்து நிக்ழவுகளும் நடைபெறும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.