பிரித்தானியாவில் உக்ரைன் அகதிகளுக்கு புதிய விசா விதிகள் அறிமுகம்
பிரித்தானியாவில் உக்ரைன் அகதிகளுக்கான விசா விதிகளை தளர்த்துவதாக பிரித்தி படேல் இன்று அறிவித்துள்ளார்.
விண்ணப்பச் செயல்முறையின் ஒரு பகுதியாக, பாஸ்போர்ட் உள்ள உக்ரைனியர்கள் இனி விசா விண்ணப்ப மையத்தில் (VAC) நேரடி சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டியதில்லை என்று உள்துறைச் செயலாளர் பிரித்தி படேல் கூறினார்.
பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விண்ணப்ப செயல்முறை வரும் மார்ச் 15, செவ்வாய்கிழமை முதல் முழுவதுமாக ஓன்லைனில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
பிரித்தானியாவுக்கு வர அனுமதி அளிக்கப்பட்ட வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் நாட்டிற்கு வந்த பிறகு பயோமெட்ரிக் தரவைச் சமர்ப்பிக்க VAC-ல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் குடும்ப மறு இணைவு பாதையின் கீழ் பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்கும் உக்ரேனியர்களுக்கு மட்டுமே விதிகளின் தளர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கடவுச்சீட்டு இல்லாத உக்ரைனியர்கள் நேரடியாக விசா விண்ணப்ப மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, பிரான்ஸ் வழியாக பிரித்தானியா சென்ற உக்ரைனியர்கள் அரசாங்கத்தின் இறுக்கமான விதிகளால் நாட்டுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். இது பிரித்தானியா மீது அழுத்தத்தை அதிகரித்தது. இதன் காரணமாகவே உக்ரைன் அகதிகளுக்கான விசா விதிகள் தளர்த்பட்டுள்ளது.