பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம்: கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூட கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதால் விருந்தோம்பல் துறையினர் கோபமடைந்துள்ளார்கள்.
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகம்
லண்டனிலுள்ள Regent Street என்னும் பிரபலமான தெருவில் அமைந்துள்ள Victory House என்னும் கட்டிடத்தில் வீராஸ்வாமி உணவகம் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.

1926ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வீராஸ்வாமி உணவகத்தை மூட அது அமைந்திருக்கும் கட்டிட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
உண்மையில், வீராஸ்வாமி உணவகம் அமைந்துள்ள கட்டிடம், பிரித்தானிய ராஜகுடும்பத்துக்கு வருவாயை ஈட்டித்தரும் Crown Estate என்னும் அமைப்புக்குச் சொந்தமானதாகும்.
அந்தக் கட்டிடம் வீராஸ்வாமி உணவகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, அடுத்த ஆண்டுடன் குத்தகை முடியும் நிலையில், அந்தக் கட்டிடத்தை அலுவலகமாக மாற்ற Crown Estate முடிவு செய்துள்ளது.
கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி
இந்நிலையில், சுமார் 100 ஆண்டுகளாக லண்டனின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன வீராஸ்வாமி உணவகத்தை மூடும் திட்டம் விருந்தோம்பல் துறையினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
உணவகத்துக்கு Crown Estate மாற்று இடம் தருவதாக கூறியுள்ளது என்றாலும், பாரம்பரியத்தை எப்படி இடம் மாற்ற முடியும் என பிரபல பிரித்தானிய ஹொட்டல் துறை நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

வீராஸ்வாமி உணவகத்தை மூடுவது லண்டன் உணவகங்களுக்கும் சுற்றுலா வருவாய்க்கும் பெரும் இழப்பு என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.

வீராஸ்வாமி உணவகம், மகாத்மா காந்தி, சார்லி சாப்ளின், இளவரசி ஆன், ஜோர்டான் மன்னரான அப்துல்லா ஆகியோரை உபசரித்த பாரம்பரியம் கொண்ட உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |