நாட்டு மக்களைவிட புலம்பெயர்ந்தோர் முக்கியமா? இங்கிலாந்து மக்கள் கோபம்
பிரித்தானியாவில், மக்கள் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள ஹொட்டல்களில் புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைக்கும் அரசின் திட்டத்துக்கு ஆதரவாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் இங்கிலாந்து மக்கள் கொந்தளிப்படைந்துள்ளார்கள்.
ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு
பிரித்தானியாவில், மக்கள் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள ஹொட்டல்களில் புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைக்கும் அரசின் திட்டத்துக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள Epping என்னுமிடத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், பிரித்தானிய சிறுமி ஒருத்தியிடம் அத்துமீற, ஏற்கனவே கோபத்திலிருந்த மக்கள் கொந்தளிப்புக்குள்ளானார்கள்.
அதைத் தொடர்ந்து புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள்.
அதே நேரத்தில், Eppingஇலுள்ள The Bell Hotel என்னும் ஹொட்டலில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டதை எதிர்த்து எசெக்ஸ் கவுன்சிலின் கீழ் செயல்படும் Epping Forest District Council என்னும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பணம் கொடுத்து ஹொட்டலில் தங்கும் வாடிக்கையாளர்களை விட்டுவிட்டு, புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டலில் தங்கவைப்பது விதிமீறலாக கருதப்படலாம் என தீர்ப்பளித்தார்.
ஆக, வழக்கில் கவுன்சில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, The Bell ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரும், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு முன் ஹொட்டலிலிருந்து வெளியேறும் நிலை உருவானது.
அரசு மேல்முறையீடு
இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டலில் தங்கவைப்பது விதிமீறல் என வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து பிரித்தானிய உள்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, The Bell ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்கு தங்கவைக்கப்பட தடை இல்லை என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. ஹொட்டல்களில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தியவர்கள், அரசுக்கு மக்களை விட சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்தான் முக்கியம் என தெரியவந்துள்ளது என்கிறார்கள் Eppingஇல் வாழும் மக்கள் கோபத்துடன்.
பெண்களையும் குழந்தைகளையும் அரசு கைவிட்டுவிட்டது. எங்கள் உரிமைகளைக் குறித்து யாருக்கும் கவலை இல்லையா என கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |