நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகும் மக்கள்: பரபரப்பாகும் பிரித்தானியா
புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த பிரித்தானிய மக்கள் தயாராகிவருவதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு எதிர்ப்பு
பிரித்தானியாவில், மக்கள் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள ஹொட்டல்களில் புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைக்கும் அரசின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள Epping என்னுமிடத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், பிரித்தானிய சிறுமி ஒருத்தியிடம் அத்துமீற, ஏற்கனவே கோபத்திலிருந்த மக்கள் கொந்தளிப்புக்குள்ளானார்கள்.
அதைத் தொடர்ந்து புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினார்கள்.
அதே நேரத்தில், Eppingஇலுள்ள The Bell Hotel என்னும் ஹொட்டலில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டதை எதிர்த்து எசெக்ஸ் கவுன்சிலின் கீழ் செயல்படும் Epping Forest District Council என்னும் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பணம் கொடுத்து ஹொட்டலில் தங்கும் வாடிக்கையாளர்களை விட்டுவிட்டு, புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டலில் தங்கவைப்பது விதிமீறலாக கருதப்படலாம் என தீர்ப்பளித்தார்.
ஆக, வழக்கில் கவுன்சில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, The Bell ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரும், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு முன் ஹொட்டலிலிருந்து வெளியேறியாகவேண்டும்.
இந்த தீர்ப்பால் உற்சாகமடைந்துள்ள பல்வேறு கவுன்சில்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருக்கின்றன.
நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், பிரித்தானியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த பிரித்தானிய மக்கள் தயாராகிவருவதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
ஏற்கனவே நேற்று இங்கிலாந்தின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் துவங்கிவிட்ட நிலையில், வார இறுதியில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து ஆகிய அனைத்து பகுதிகளிலும், சுமார் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த மக்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
ஒரு பக்கம் புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டமும், மறுபக்கம் ஹொட்டல்களிலேயே, ’அகதிகளை வரவேற்கிறோம்’ என்று கூறும் பதாகைகளுடன் ஒரு கூட்டமும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளது.
ஆக, நாடு முழுவதும் இந்த இரண்டு பிரிவினரும் மோதுவதைத் தடுக்க அவர்களுக்கு நடுவில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், வார இறுதி மற்றும் வங்கி விடுமுறையும் சேர்ந்துகொண்டுள்ளதால், அடுத்து என்ன நடக்குமோ என்னும் பதற்றம் நிலவுவதை மறுப்பதற்கில்லை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |