சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகைகளை பறிமுதல் செய்ய பிரித்தானியா திட்டம்
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரின் தங்கும் இடத்துக்கான செலவுகளுக்காக, அவர்களுடைய திருமண மோதிரங்கள் தவிர்த்து, பிற நகைகள், கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்ய பிரித்தானிய உள்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளது.
உள்துறைச் செயலரின் அதிரடி நடவடிக்கைகள்
2019ஆம் ஆண்டு முதல், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோருக்காக செய்யப்படும் செலவு சுமார் 15 பில்லியன் டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இப்படி புலம்பெயர்ந்தோருக்காக மக்கள் வரிப்பணம் செலவிடப்படும் நிலையில், சில புகலிடக்கோரிக்கையாளர்கள் கார்கள் முதலான விலையுயர்ந்த சொத்துக்களை வைத்துள்ளார்கள்.
ஆக, அவர்களுக்காக மக்கள் வரிப்பணம் செலவிடப்படுவதற்கு பதிலாக, அவர்களுடைய சொத்துக்களையே, அதாவது, வாகனங்கள், நெக்லஸ்கள் மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரங்களைப் பறிமுதல் செய்து, அவற்றை விற்று, அவர்களுக்கான செலவுகளுக்காக பயன்படுத்த உள்துறைச் செயலகம் திட்டமிட்டுவருகிறது.
மேலும், ஏற்கனவே சட்டப்படி பிரித்தானியாவுக்கு வந்து ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களின் கார்களையும் பறிமுதல் செய்யும் திட்டமும் உள்ளது.
அத்துடன், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து, உணவு டெலிவரி முதலான வேலைகள் செய்துவரும் புலம்பெயர்ந்தோரின் மின்சார பைக்குகளையும் பறிமுதல் செய்து, அவற்றை விற்று, அவர்கள் தங்கியிருக்கும் ஹொட்டலுக்கான செலவை அதிலிருந்து எடுத்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தத்தில், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஏன் பிரித்தானியாவுக்கு வந்தோம் என கவலைப்படும் ஒரு நிலையை உருவாக்க உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் திட்டமிட்டு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருவது தெளிவாகப் புரிகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |