"வெட்கமே இல்லாதவர்" பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கிடைத்த அவப்பெயர்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் 'வெட்கமே இல்லாத மனிதர்' என தொழிலாளர் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
லண்டனில் கொரோனா தொற்று அதிர்க்கரித்தபோது, மூன்று அடுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்ட காலகட்டத்தில் டவுனிங் ஸ்ட்ரீட் மதுபான விருந்துகளை கொடுத்தது தெரியவந்ததில் இருந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையான அழுத்தத்தில் உள்ளார்.
மதுபான விருந்து நடந்தபோது எடுக்கப்பட்ட சில காட்சிகள் கசிந்து சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்த விதிமீறல் பிரித்தானிய ஊடகங்களால் Partygate என்று அழைக்கப்பட்டது.
கோவிட்-19 வழிகாட்டுதல்களை மீறியதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றவாளி என்று பெருநகர காவல்துறை கண்டறிந்து அவருக்கு அபராதம் விதித்தது. சட்டத்தை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரித்தானிய தலைவர் என்ற அவப்பெயரை பிரதமர் போரிஸ் ஜான்சன் பெற்றுள்ளார்.
போரிஸ் ஜான்சன் மன்னிப்பு
அபராதம் செலுத்திய பிறகு, நாடாளுமன்றத்தில் நேற்று தனது முதல் உரையின் போத பேசிய போரிஸ் ஜான்சன், "கிடைக்கும் முதல் அமர்வின் நாளில், நான் ஹவுஸ் ஆப்ஃ காமன்ஸ்க்கு முழு மனதுடன் மன்னிப்பு கேட்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்" என்று கூறினார்.
''நோட்டீஸ் கிடைத்தவுடன், நான் வேதனையையும் கோபத்தையும் ஒப்புக்கொண்டேன், மேலும் மக்கள் தங்கள் பிரதமரிடம் இருந்து நல்லதை எதிர்பார்க்க உரிமை உண்டு என்று கூறினேன். அப்போது அல்லது அதற்குப் பிறகு, கோவிட் மூலோபாயம் குறித்த ஒரு முக்கிய கூட்டத்திற்கு சற்று முன்பு அமைச்சரவை அறையில் ஒன்று கூடுவது விதிகளை மீறுவதாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றவில்லை. அது எனது தவறு என்று மீண்டும் ஏற்றுக்கொள்கிறேன், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்கிறார்.
எதிர்க்கட்சி விமர்சனம்
இதற்கு, பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவரான கியர் ஸ்டார்மர், அவர் மன்னிப்பு கேட்டதை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார், மேலும் "பிரித்தானிய மக்கள் அவரை இனி நம்பமாட்டார்கள்" என்றும் அவர் "வெட்கமே இல்லாத மனிதர்" என்றும் கூறியுள்ளார்.
மேலும், ''இது சிஸ்டத்தில் சரி செய்யக்கூடிய கோளாறு அல்ல. அவர் எப்போதுமே அப்படித்தான், அவரால் தன்னை மாற்றிக்கொள்ளவே முடியாது. அவர் அரசியலில் கண்ணியத்தையும் நேர்மையை மீண்டும் கொண்டு வர வேண்டும், மேலும் இந்த நாட்டை இழிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்.
மேலும், அரசியலில் நேர்மைக்காக ஜான்சனை பதவி விலகுமாறு தொழிலாளர் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
சர்ச்சையின் விளைவாக, ஜான்சனின் ஒப்புதல் மதிப்பீடு சரிந்துள்ளது, சமீபத்திய தேசிய கணக்கெடுப்பில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் ஜான்சனைப் பற்றி எதிர்மறையாகப் பேசியுள்ளனர்.

