பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை! எம்.பி உட்பட இருவர் குற்றச்சாட்டு
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை பெண்களை தகாத முறையில் தொடுவதாக குற்றம் சாட்டபட்டுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட இரண்டு பெண்கள், பிரதமர் போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டான்லி ஜான்சன் தங்களைத் தகாத முறையில் தொட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான கரோலின் நோக்ஸ் (Caroline Nokes), ஸ்கை நியூஸ் உடனான ஒரு நேர்காணலில், ஸ்டான்லி ஜான்சன் தனது அடிப்பகுதியில் அடித்ததாகக் கூறினார்.
2003-ஆம் ஆண்டு கட்சியின் வருடாந்த மாநாட்டில் அவர்கள் இருவரும் தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற வேட்பாளர்களாக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
"அந்த நேரத்தில் Devon-ல் உள்ள Teignbridge கன்சர்வேடிவ் வேட்பாளரான ஒரு முக்கியமான மனிதர், அவரால் முடிந்தவரை வேகமாக எனது பின்புறத்தில் அடித்துவிட்டு, 'ஓ, ரோம்ஸி, உன் சீட் அழகாக இருக்கிறது' என கூறிச் சென்றது எனக்கு நினைவிருக்கிறது" என்று கரோலின் கூறினார்.
ஸ்டான்லி ஜான்சன் தன்னை பின்புறத்தில் அடித்தபோது, தனக்கு 30-35 வயது இருந்திருக்கும் என்றார்.
நோக்ஸின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நியூ ஸ்டேட்ஸ்மேனின் அரசியல் நிருபர் அலிபே ரியா (Alibhe Rea) தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டான்லி ஜான்சன் "2019-ல் நடந்த கன்சர்வேடிவ் மாநாட்டில் ஒரு விருந்தில் என்னை தவறாக தொட்டுச் சென்றார்" என்று ட்வீட் செய்தார்.
"பிரதமரின் தந்தை என்றும் பார்க்காமல், நம்மில் யாரும் பொறுத்துக்கொள்ளக் கூடாத ஒன்றை வெளிப்படையாக கூறியதற்காக கரோலின் நோக்ஸுக்கு நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன்" என்று ரியா மேலும் கூறினார்.
Photo: PA MEDIA
அதற்கு பதிலளித்த ஸ்டான்லி ஜான்சன், ''எனக்கு கரோலின் நோக்ஸ் பற்றி எதுவும் நினைவில் இல்லை, ஆனால் நீங்கள் செல்லுங்கள். மேலும் பதில் இல்லை.''
நோக்ஸ் தற்போது பாராளுமன்றத்தின் பெண்கள் மற்றும் சமத்துவங்கள் தெரிவுக்குழுவின் தலைவராகவும் முன்னாள் அரசாங்க அமைச்சராகவும் உள்ளார். அவர் 2010 முதல் ரோம்சி மற்றும் சவுத்தாம்ப்டன் நார்த் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
ஸ்டான்லி ஜான்சன் உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தில் பணியாற்றிய முன்னாள் அரசியல்வாதி ஆவார்.
பிரதமரின் தந்தை மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் தற்போது பிரித்தானியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.