ரிஷி சுனக்குக்கு இன்றே பிரித்தானிய பிரதமராகும் வாய்ப்பு: ஒரே ஒரு தடை
பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் களமிறங்கியுள்ள முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக், இன்றே கூட பிரதமராக வாய்ப்பு உள்ளது.
அதற்குத் தடையாக நிற்கும் ஒரே நபர், பென்னி மோர்டான்ட்.
பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டி மீண்டும் துவங்கியுள்ள நிலையில், இம்முறை வேட்பாளர் மனு தாக்கல் செய்ய விரும்புவோர், குறைந்தபட்சம் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்ற புதிய விதி கடந்த வியாழக்கிழமை வகுக்கப்பட்டது.
அதன்படி பார்க்கும்போது, 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ஒரே வேட்பாளர் ரிஷி சுனக்தான். அவருக்கு 142 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.
அவரை எதிர்த்து களமிறங்கத் திட்டமிட்டுள்ள பென்னி மோர்டான்டுக்கு இப்போதைக்கு 29 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
இன்றைக்கு மதியம் உள்ளூர் நேரப்படி 2.00 மணிக்குள் பென்னி 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதைக் காட்டத் தவறினால், பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் ரிஷி சுனக்தான் என்பது இன்றே உறுதியாகிவிடும்.
REUTERS
விடயம் என்னவென்றால், கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆகவே, இன்று மதியத்திற்குள் 100 உறுப்பினர்களின் ஆதரவை பென்னியால் பெறமுடியுமானால், மீண்டும் அவரும் ரிஷியும் போட்டி போடவேண்டியிருக்கும்.
பிறகு இந்த இருவரில் யாரை பிரதமராகத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்வதற்கு, கன்சர்வேட்டிவ் கட்சியின் 170,000 உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.
அடுத்த வெள்ளிக்கிழமை பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பிரதமர் வேட்பாளருக்கான மனு தாக்கல் செய்வதற்கு சில மணி நேரமே இருந்த நிலையில், முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் பிரதமர் போட்டியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.