ட்ரம்பை தொடர்ந்து மேக்ரானை கேலி செய்துள்ள மற்றொரு நாட்டின் தலைவர்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கூலிங் கிளாஸ் அணிந்து உரையாற்றிய விடயத்தை இணையத்தில் பலரும் கேலி செய்துவருகிறார்கள்.
அந்த வரிசையில் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும் இணைந்துகொண்டுள்ளார்!
மேக்ரானை கேலி செய்யும் இணையம்
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கூலிங் கிளாஸ் அணிந்தவண்ணம் கூட்டத்தில் உரையாற்றினார்.

தனது கண்ணில் ஒரு சிறு இரத்தக்குழாய் வெடித்ததால் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காகவே கூலிங் கிளாஸ் அணிந்திருப்பதாகவும் தெரிவித்தும் இருந்தார் மேக்ரான்.
ஆனாலும், பலரும் அவரை கேலி செய்துவருகிறார்கள். கடந்த ஆண்டு, மேக்ரானின் மனைவியாகிய பிரிஜிட் மேக்ரான் தன் கணவரை தாக்குவது போன்ற ஒரு காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது.
அதை சுட்டிக்காட்டியே, இப்போதும் பிரிஜிட் மேக்ரானைத் தாக்கிவிட்டாரா என்னும் ரீதியில் அவரை கேலி செய்துவருகிறது இணையம்.
மேக்ரானை கேலி செய்துள்ள ஸ்டார்மர்
ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் மேக்ரான் கூலிங் கிளாஸ் அணிந்து உரையாற்றியதை கேலி செய்திருந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும் மேக்ரானை கேலி செய்துள்ளார்.
British Prime Minister Keir #Starmer imitated #Macron's viral sunglasses moment from the #Davos summit. The French President was giving a speech responding to #Trump's threats of tariffs on European countries until they agreed to a US purchase of #Greenland. pic.twitter.com/lBKr64atIC
— FRANCE 24 English (@France24_en) January 27, 2026
கருப்புக் கண்ணாடி ஒன்றை எடுத்து அணிந்துகொண்ட ஸ்டார்மர், ’Bonjour’ என பிரெஞ்சு மொழியில் வேடிக்கையாகக் கூற, அவர் மேக்ரானை கேலி செய்வதை புரிந்துகொண்ட அந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் அனைவரும் கொல்லென சிரிப்பதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
மேலும், டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றும்போது, ‘for sure’ என்னும் சொற்களை அடிக்கடி பயன்படுத்தினார் மேக்ரான்.
அந்த வார்த்தைகளும் இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், ஸ்டார்மர் தன்னை கேலி செய்யும் வீடியோ சமூக ஊடகம் ஒன்றில் வெளியான சில நிமிடங்களில், அதை கமெண்ட் செய்திருந்தார் மேக்ரான். அவர் கொடுத்த கமெண்ட், ‘for sure’!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |