பிரித்தானியாவில் காணாமல் போன 2 இளைஞர்கள்: காரில் சடலமாக மீட்பு: பொலிஸார் வழங்கிய தகவல்
பிரித்தானியாவில் காணாமல் போன இருவர் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன இருவர்
பிரித்தானியாவில் கடந்த ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த 31 வயது வில்லியம் ஹட்சின்சன் மற்றும் 27 வயது ஸ்டூவர்ட் டாலிஸ் ஆகியோர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 24ம் திகதி பிரஸ்டன்(Preston) பகுதியில் கடைசியாகப் பார்க்கப்பட்ட இருவரும், அதிலிருந்து 3 நாட்கள் கழித்து இருவரையும் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நியூட்டன் வித் கிளிஃப்டன் பகுதியில் உள்ள A584 பிரஸ்டன் நியூ ரோடு அருகே புதருக்குள் மறைந்து இருந்த நீல நிற பியூஜியோட் 106 ரக காரை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அதில் கண்டெடுக்கப்பட்ட உடல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்றாலும், சடலங்கள் வில்லியம் மற்றும் ஸ்டூவர்ட் என்று பொலிஸார் நம்புகின்றனர்.

ஜூன் 24ம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் இந்த கார் சாலையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |