பிரித்தானிய மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டம் குறித்து வெளியான முக்கிய தகவல்!
பிரித்தானிய மகாராணி ஆட்சியின் 70-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அடுத்த ஜூன் மாதம் வங்கி விடுமுறையின் போது பப்கள் கூடுதலாக இரண்டு மணிநேரம் திறந்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பிளாட்டினம் ஜூபிலியைக் குறிக்கும் வகையில், ஜூன் 2022-ல் வங்கி விடுமுறை வார இறுதியில் அதிகாலை 1 மணி வரை பப்கள் திறந்துவைக்க அனுமதிக்கப்படலாம் என அறிக்கை வெளியாகியுள்ளது.
அதாவது, வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் பார்கள், பப்கள், கிளப்புகள் போன்ற இடங்கள் கூடுதலாக இரண்டு மணிநேரங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
ராணியின் ஆட்சியின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜூன் 2 முதல் ஜூன் 4 வரையிலான மூன்று நாட்களுக்கு உரிம நேரத்தை இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை நீட்டிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, நாட்டு மக்களுடன் ஒரு மாத கால ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கத்தின் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத கால கலந்தாய்வில், காவல் துறை, உரிமம் வழங்கும் அதிகாரிகள் மற்றும் மதுபான விழிப்புணர்வு குழுக்கள் எழுப்பும் பிரச்னைகள் பரிசீலிக்கப்படும்.
2003 உரிமச் சட்டத்தின் கீழ், பப்கள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிப்பது குறித்த உத்தரவை பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரித்தி படேல் வெளியிட அனுமதிக்கப்படுகிறார்.
மாகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, லைவ் இசை நிகழ்ச்சிகள், நன்றி தெரிவிக்கும் சேவை நாட்டில் நடைபெறும்.
ஜூன் 2, 2022 அன்று சம்பிரதாயமான பிறந்தநாள் அணிவகுப்பு நடத்தப்படும் மற்றும் புனித பால் கதீட்ரலில் நன்றி தெரிவிக்கும் ஆராதனை நடைபெறும்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் 1400-க்கும் மேற்பட்ட வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்பார்கள்.
ஜுலே 5-ஆம் திகதி பிளாட்டினம் ஜூபிலி அழகிப் போட்டியை மத்திய லண்டனில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.