உக்ரைன் அகதிகளுக்கு எல்லையை திறக்க பிரித்தானியா மறுப்பு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், அங்கிருந்து தப்பி வரும் அகதிகளுக்கு எல்லையை திறக்க பிரித்தானியா மறுத்துள்ளது.
ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியதில் இருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
உக்ரனை விட்டு வெளியேறிய நூறாயிரக்கணக்கான மக்கள் போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனிடையே, உக்ரைனிலிருந்து வரும் அகதிகளுக்கான விசா தேவைகளை பிரித்தானியா தளர்த்த வேண்டும் என அழைப்புகள் விடுக்கப்பட்டது.
மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியைத் தீர்ப்பதில் பிரித்தானியா போதுமான அளவு செயல்படவில்லை மற்றும் அதன் ஐரோப்பிய அண்டை நாடுகளை விட மிகவும் பின்தங்கியிருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், உக்ரைன் அகதிகளுக்கு விசா தேவைகளை தளர்த்த விடுக்கப்பட்ட அழைப்புகளை பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறியதாவது, பிரித்தானியா மிகவும் உயர்ப்பண்புடைய நாடு. அகதிகளை கட்டுப்பாட்டுடன் மற்றும் சரிபார்த்து நாட்டிற்குள் அனுமதிக்க நாங்கள் விரும்புகிறோம்.
உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, நாட்டிற்குள் யார் வருகிறார்கள் என்பதைச் சரிபார்க்க சில அடிப்படை நடைமுறைகள் பிரித்தானியாவில் உள்ளன என்பதை உறுதிப்படுத்துவது விவேகமானது என போரிஸ் தெரிவித்துள்ளார்.