கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரித்தானியா! எச்சரிக்கையாக இருக்குமாறு போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்
பிரித்தானியாவில் இன்று முதல் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இரண்டு வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் அல்லது 6 பேர் கொண்ட குழு பொது இடங்களில் மற்றும் தங்கள் வீடுகளில் சந்திக்க இன்று (மார்ச் 29) முதல் அனுமதிக்கப்படுகிறது.
டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கோல்ஃப் மைதானங்கள் உள்ளிட்ட வெளிப்புற விளையாட்டு வசதிகளும் மீண்டும் திறக்கப்படுகின்றன. மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்ற வெளிப்புற விளையாட்டுக்களையும் மீண்டும் தொடங்க இன்று முதல் அனுமதிக்கப்படும்.
மேலும், ஆறு பேர் வரை கலந்து கொண்டு திருமணங்களை நடத்த அனுமதிக்கப்படும்.
இருப்பினும், முடிந்தவரை வீட்டிலிருந்து அதிக தூரத்துக்கு செல்வதை தவிர்க்கவும், Work from Home செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், எல்லோரும் தொடர்ந்து விதிகளை கடைபிடிக்க வேண்டும், கைகள் கழுவுவதையும், முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அழைக்கும்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறிய ஜான்சன், மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.


