பிரித்தானியாவிலிருந்து இந்தியா திரும்பிய நபருக்கு நேர்ந்த துயர முடிவு
Three relatives held, three booked for UK man’s death: இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த ஒருவருடைய மரணம் தொடர்பில் இந்தியாவில் அவருடைய மூன்று உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், மூன்று பேர் பொலிசாரால் தேடப்பட்டுவருகிறார்கள்.
இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த சத்னாம் சிங் (70), திங்கட்கிழமையன்று, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா நகரில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர், விஷம் உட்கொண்டு தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டது தெரியவந்துள்ளது.
நடந்தது என்ன?
சிங் தன் முடிவு குறித்து கடிதம் ஒன்றை எழுதிவைத்துள்ளதுடன், விஷம் உட்கொள்ளும் முன், தன் முடிவுக்கான காரணம் குறித்து வீடியோ ஒன்றையும் தன் மொபைலில் பதிவு செய்துவைத்துள்ளார்.

அதாவது, சிங்குடைய மாமாவுக்கு ஐந்து பெண் பிள்ளைகள். அவருக்கு ஆண் பிள்ளை இல்லாததால் சிங்கை மகனாக தத்தெடுத்துக்கொண்டுள்ளார் அவருடைய மாமா.
1990இல் அவர் மரணமடைய, தங்கள் அத்தையை சிங்கும் அவரது குடும்பத்தினரும் 31 ஆண்டுகளாக தங்களுடன் வைத்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் புற்றுநோயால் அவதியுற்ற சிங்கின் அத்தை, 2021ஆம் ஆண்டு மரணமடையும் முன், தனது சொத்தை சிங்குக்கு எழுதிவைத்துள்ளார்.
சிங் சமீபத்தில் இந்தியா திரும்பிய நிலையில், சிங்கின் அத்தையின் மகள்கள் மூன்று பேரும் அவர்களுடைய கணவர்கள் மற்றும் சில உறவினர்களும், சிங் மோசடி செய்து தங்கள் தாயின் சொத்தை பறித்துக்கொண்டதாக பொலிசில் புகாரளித்துள்ளார்கள்.
அரசு அதிகாரி ஒருவர் உதவியுடன், சிங்கை மிரட்டிய அவர்கள், சிங் மீதான எஃப் ஐ ஆரை ரத்து செய்யவேண்டுமானால், ஐந்து ஏக்கர் நிலம் மற்றும் இரண்டு வீடுகளை தங்கள் பெயரில் எழுதிவைக்கவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்கள்.
தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் தன் அத்தையின் பிள்ளைகள் தொடர்ந்து தொல்லை கொடுக்கவே, தான் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்ததாக தான் பதிவு செய்துவைத்துள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார் சிங்.
சிங்கின் மகன், தன் தந்தையின் மரணம் குறித்து புகாரளித்ததைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், மற்ற மூன்று பேர் தலைமறைவாகிவிட, அந்த மூன்று பேரையும் தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.