நாய்க்கு செய்த செலவைவிட பணியாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கிய பிரித்தானியாவின் பணக்கார குடும்பம்
பிரித்தானியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்று என கருதப்படும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள், தங்கள் வீட்டிலுள்ள நாய்க்கு செலவு செய்ததைவிட குறைவான பணத்தை தங்களிடம் வேலை பார்த்தவர்களுக்கு ஊதியமாகக் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பணக்கார குடும்பம்
பிரித்தானியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான ஹிந்துஜா குடும்பம், வாகனங்கள், எண்ணெய் மற்றும் ரசாயனங்கள், வங்கி மற்றும் நிதி, தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம், உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பதினொரு துறைகளில் கோலோச்சும் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
இந்தக் குழுமத்தின் உரிமையாளர்களான ஹிந்துஜா சகோதரர்களுக்கு உலகம் முழுவதும் சுமார் 37 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
நாய்க்கு செய்த செலவைவிட பணியாளர்களுக்கு குறைவான ஊதியம்
ஹிந்துஜா குடும்பத்தினருக்கு ஜெனீவாவில் ஒரு வீடு உள்ளது. பிரகாஷ் மற்றும் கமல் ஹிந்துஜா, அவர்களுடைய மகன் அஜய், மருமகள் நம்ரதா ஆகியோர், தங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காகவும், வீட்டு வேலைகள் செய்வதற்காகவும் இந்தியாவிலிருந்து ஆட்களை அழைத்து வந்துள்ளார்கள்.
அவர்களுக்கு, நாளொன்றிற்கு 18 மணி நேரம் வேலை செய்தும், 7 பவுண்டுகள் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வீட்டை விட்டு வெளியே செல்லவும் அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
ஹிந்துஜா குடும்பம் மீது ஆட்கடத்தல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கி சமரசம் செய்யப்பட்டுவிட்டாலும், அவர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து அழைத்துவந்தவர்களின் பாஸ்போர்ட்களை பிடுங்கிவைத்துக்கொண்டதாலும், வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காததாலும், அது ஆட்கடத்தலாக கருதப்படும் என்பதால், வழக்கு தொடர்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான ஜெனீவாவின் மிக பிரபலமான சட்டத்தரணியான Yves Bertossa, ஹிந்துஜா குடும்பம், தங்கள் நாய்க்கு ஆண்டொன்றிற்கு சுமார் 10,000 டொலர்கள், அதாவது, சுமார் 7,800 பவுண்டுகள் செலவிடும் நிலையில், அவர்கள் வீட்டில் வேலை செய்தவர்களுக்கோ, நாளொன்றிற்கு 8 டொலர்கள் அதாவது, 7 பவுண்டுகள் மட்டுமே ஊதியம் வழக்கியதாக வாதம் முன்வைத்துள்ளார்.
ஆகவே, ஹிந்துஜா குடும்பத்திற்கு சிறைத்தண்டனை விதிக்குமாறும், பல மில்லியன் டொலர்கள் இழப்பீடு மற்றும் வழக்குக் செலவுக்காக வழங்க உத்தரவிடுமாறும் Yves Bertossa நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |