ஓடிக்கொண்டே 4 ரூபிக்ஸ் கியூப்களை தீர்த்து உலக சாதனை படைத்த பிரித்தானிய இளைஞர்
UK Runner Solves 4 Rubik’s Cubes, Sets Record: பிரித்தானிய இளைஞர் ஒருவர் ரூபிக்ஸ் கியூப் விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ரூபிக்ஸ் கியூப் விளையாட்டில் கின்னஸ் சாதனை
பிரித்தானியாவைச் சேர்ந்த Speedcubing சாம்பியனான ஜார்ஜ் ஸ்கோலி (George Scholey) புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்து கவனம் ஈர்த்துள்ளார்.
ஓட்டப்பந்தயமும் ரூபிக்ஸ் கியூப் தீர்க்கும் திறமையும் இணைந்த இந்த அரிய சாதனை கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்றது.
5 நிமிடம் 9.25 விநாடிகளில் சாதனை
கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தகவலின்படி, ஜார்ஜ் ஸ்கோலி 1 மைல் (சுமார் 1.6 கிலோமீட்டர்) தூரம் ஓடும்போது, அதே நேரத்தில் 4 ரூபிக்ஸ் கியூப்களை வெற்றிகரமாகத் தீர்த்து சாதனை படைத்தார். இந்த சவாலை அவர் வெறும் 5 நிமிடம் 9.25 விநாடிகளில் நிறைவு செய்து உலக சாதனை பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த முயற்சி அக்டோபர் 12 அன்று ரொறன்ரோவில் உள்ள சென்ட்ரல் டெக் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் காற்றின் தாக்கம் இருந்தபோதிலும் அவர் தனது இலக்கை வெற்றிகரமாக அடைந்தார்.
சாதனையின் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு 400 மீட்டர் சுற்றையும் ஓடுவதற்கு முன்பு ஒரு ரூபிக்ஸ் கியூபை தீர்க்க வேண்டும். இவ்வாறு நான்கு முறை கியூபைத் தீர்த்து, நான்கு சுற்றுகளை ஓடி முழு மைல் தூரத்தை அவர் கடந்து முடித்தார்.

ஜார்ஜ் ஸ்கோலி சாதனைகள்
ஜார்ஜ் ஸ்கோலிக்கு இது முதல் சாதனை அல்ல. 2022-ஆம் ஆண்டு ஸ்கேட்போர்டில் பயணித்தபடியே 500 ரூபிக்ஸ் கியூப்களைத் தீர்த்து சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் 6,931 கியூப்களைத் தீர்த்து மற்றொரு உலக சாதனையையும் உருவாக்கினார். 2024 லண்டன் மராத்தானில் ஓடும்போது 520 கியூப்களைத் தீர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சாதனைக்காக அவர் ஏழு வாரங்கள் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டார். ஓட்ட வேகத்தையும் கியூப் தீர்க்கும் வேகத்தையும் மேம்படுத்தி தயாரானார். பயிற்சிக்காலத்தில் ஒரு கியூபை வெறும் 3.86 விநாடிகளில் தீர்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சுற்றில் ரசிகர்களின் உற்சாகக் குரல்களுக்கு மத்தியில் இலக்கை அடைந்த ஜார்ஜ் ஸ்கோலி, தனது சாதனையை நண்பர்களுடன் கொண்டாடினார். மனித திறனுக்கும் மன ஒருமைப்பாட்டிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த சாதனை பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |