பிரித்தானியாவின் புதிய eVisa: புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள அச்சம்
பிரித்தானியா தனது புலம்பெயர்தல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது.
அவ்வகையில், பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள், தங்கள் அடையாளம் மற்றும் புலம்பெயர்தல் நிலைப்பாட்டை டிஜிட்டல் மயமாக்கவேண்டும்.
இப்படி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் அடையாளம் மற்றும் புலம்பெயர்தல் நிலைப்பாடு, eVisa என அழைக்கப்படுகிறது.
புலம்பெயர்ந்தோருக்கு உருவாகியுள்ள அச்சம்
பிரித்தானியாவில் சட்டப்படி வாழும் புலம்பெயர்ந்தோர், வேலை செய்ய, பயணிக்க, வீடு வாடகைக்கு பிடிக்க மற்றும் படிப்பதற்காக, தங்கள் அடையாளமாக இந்த eVisaவை பயன்படுத்தவேண்டும்.

காகித வடிவில் வழங்கப்படும் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தொலைந்துபோகலாம்.
ஆகவே, இந்த டிஜிட்டல் முறையிலான eVisa தொலைந்துபோகாது, மேலும், அது பயனுள்ளதாகவும், தங்கள் அடையாளத்தை காட்ட எளிமையானதாகவும் இருக்கும் என அரசு கூறுகிறது.
ஆனால், புலம்பெயர்தல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவது, அதாவது, காகித வடிவிலான அடையாளங்களை முற்றிலுமாக நீக்கிவிட்டு eVisaவை மட்டுமே பயன்படுத்தக் கோருவது புலம்பெயர்ந்தோருக்கு கடினமான விடயமாக இருக்கும் என்கின்றன புலம்பெயர்தல் தொடர்பிலான ஆய்வமைப்புகள்.
Migrant Voice மற்றும் Warwick பல்கலை ஆகிய அமைப்புகள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், தங்கள் புலம்பெயர்தல் நிலைப்பாட்டை டிஜிட்டல் மயமாக்கும் விடயம் புலம்பெயர்ந்தோருக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
தங்கள் அடையாளம் மற்றும் புலம்பெயர்தல் நிலைப்பாட்டை டிஜிட்டல் மயமாக்கத் தவறினால், அல்லது டிஜிட்டல் போர்ட்டலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதனால் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடலாம் என்னும் அச்சம் புலம்பெயர்ந்தோருக்கு உள்ளது.
பணி வழங்குவோர், வீடு வாடகைக்கு விடுவோர், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் எல்லை அலுவலர்கள் பலருக்கே இந்த டிஜிட்டல் புலம்பெயர்தல் சோதனை குறித்து சரியாகத் தெரியவில்லை.
சிலர் புலம்பெயர்ந்தோரிடமே இது என்ன, விளக்கமுடியுமா என கேட்கிறார்களாம். இன்னொரு பக்கம் அதிகம் படிக்காதவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள் தங்கள் அடையாளம் மற்றும் புலம்பெயர்தல் நிலைப்பாட்டை டிஜிட்டல் மயமாக்க திணறும் நிலையும் காணப்படுகிறது.
