ரஷ்யாவிற்கு எதிராக 31 புதிய தடைகளை அறிவித்த பிரித்தானிய அரசு
UK sanctions hit Russia’s war chest and propaganda: பிரித்தானிய அரசு ரஷ்யாவுக்கு எதிராக 31 புதிய தடைகளை அறிவித்துள்ளது.
புதிய தடைகள்
இந்த நடவடிக்கை, உக்ரைனில் நடைபெறும் போருக்கான நிதியை தடுக்கவும், தவறான தகவல் பரப்பும் வலையமைப்புகளை சீர்குலைக்கவும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் கொடுமைகளுக்கு பொறுப்பானவர்களை குறிவைக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் ரஷ்யா 3,100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைனில் தாக்குதல் நடத்த பயன்படுத்தியது. இதனால் பொதுமக்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசு, உக்ரைனின் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையில் நடந்த போலி தேர்தல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரித்தானியாவின் இந்த புதிய தடைகளில், உக்ரைன் பொதுமக்களை சட்டவிரோதமாக கைது செய்து, கொடுமைப்படுத்திய எட்டு பேர், மேலும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு அழைத்து சென்று முகாம்களில் வைத்திருக்கும் ஏழு பேர் குறிவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 6,000 குழந்தைகள் இவ்வாறு இடம்பெயர்க்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யா தனது எரிவாயு ஏற்றுமதி வருவாயைத் தக்கவைத்துக்கொள்ள “shadow fleet” எனப்படும் புதிய கப்பல் வலையமைப்பை உருவாக்க முயற்சிக்கிறது. இதனைத் தடுக்க, பிரித்தானிய அரசு அந்தக் கப்பல்களையும் தடைகளில் சேர்த்துள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து, ரஷ்யாவின் போர் நிதியை குறைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை சர்வதேச தடைகள் மூலம் ரஷ்யா சுமார் 500 பில்லியன் டொலர் நிதியை இழந்துள்ளது.
பிரித்தானிய அரசு, “உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதில் எங்கள் உறுதியை அசைக்க முடியாதது” என்று தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |