தீவு ஒன்றில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு விடிவு காலம்: பிரித்தானியாவின் அதிரடி முடிவு
இந்தியப் பெருங்கடலில் பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்குமான இராணுவ தளமாக செயல்படும் தீவு ஒன்றில் சிக்கியுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை மீட்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ருமேனியாவிற்கு தற்காலிகமாக
முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த தீவில் இருந்து ருமேனியாவிற்கு தற்காலிகமாக அனுப்பி வைக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளது. 6 மாதங்களுக்கு பிறகு அவர்கள் பிரித்தானியாவுக்கு திரும்பலாம்.
அல்லது அந்த குழுவில் உள்ள எஞ்சியவர்களுக்கு இலங்கை திரும்ப நிதியுதவி அளிக்கவும் பிரித்தானியா தயாராக உள்ளது. கடந்த 2021ல் டசின் கணக்கான தமிழ் மக்கள் தங்கள் படகு சேதமடைந்ததை அடுத்து முதல் முறையாக டியாகோ கார்சியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்.
ஆனால் அந்த பிரதேசத்தின் அசாதாரண நிலை நீண்ட சட்ட மோதலுக்கு வழிவகுத்தது. அந்த மக்களை பிரித்தானியாவுக்கு வரவழைத்தால், அது புலம்பெயர் விவகாரத்தில் இன்னொரு சிக்கலை உருவாக்கும் என பிரித்தானிய அரசாங்கம் அஞ்சியது.
இந்த நிலையில், புலம்பெயர்ந்தோரின் நலனைப் பாதுகாக்கும் தீர்வைக் காண அமைச்சர்கள் பணியாற்றி வருவதாக வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
டியாகோ கார்சியாவில் சட்டத்திற்கு புறம்பாக சிறிய முகாம் ஒன்றில் தமிழ் மக்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தனியார் பாதுகாப்பு நிறுவனமான G4S அதிகாரிகள் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. டியாகோ கார்சியாவில் தற்போது 56 தமிழர்கள் உள்ளனர். மேலும் எட்டு பேர் தற்போது ருவாண்டாவில் மருத்துவ சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கை திரும்ப நடவடிக்கை
பெரும்பாலான புலம்பெயர் மக்கள் தங்களுக்கு அகதி அந்தஸ்து அளிக்கப்படும் என்ற முடிவுக்காக காத்திருக்கின்றனர். 8 பேர்களுக்கு ஏற்கனவே அகதி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீவுக்கான உயர் அதிகாரி Paul Candler தெரிவிக்கையில், முகாமில் புலம்பெயர் மக்களின் நிலை மிக மோசமாக உள்ளது என்றும், அவர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்வதே உரிய முடிவாக இருக்கும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் தற்போது தமிழர்கள் சிலரை ருமேனியாவிற்கு தற்காலிகமாக அனுப்பி வைக்கவும், 6 மாதங்களுக்கு பின்னர் பிரித்தானியா திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியவர்களுக்கு நிதியுதவி அளித்து இலங்கை திரும்ப நடவடிக்கை முன்னெடுக்கப்படும். பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த முடிவை பரிசீலனை செய்யவும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்த முடிவு செய்யும் தமிழர்கள் மீண்டும் 4,600 மைல்கள் பயணித்து ருமேனியா செல்ல வேண்டும். அல்லது இலங்கை திரும்ப வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |