உக்ரைனுக்கு சிறப்புப் படைகளை அனுப்பிய பிரித்தானியா! கசிந்த முக்கிய தகவல்
உக்ரேனிய இராணுவத்திற்கு பயிற்சி அளிக்கவும் உதவவும் பிரித்தானியா 100-க்கும் மேற்பட்ட சிறப்புப் படை ஆலோசகர்களை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது என்று இராணுவ வட்டாரத்தை மேற்கோள்காட்டி பிரிட்டிஷ் செய்தித்தாளான Mirror செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரேனிய இராணுவத்திற்கு உதவவும் ஆலோசனை வழங்கவும் அந்நாட்டிற்கு பிரித்தானியா சிறப்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
பிரித்தானியா சிறப்புப் படைகள் பெரிய அளவிலான திறன்களைக் கொண்டுள்ளனர், இது உக்ரேனியப் படைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று இராணுவ வட்டாரம் கூறியதாக Mirror மேற்கோள் காட்டியுள்ளது.
SAS, SBS, சிறப்பு உளவுப் படைப்பிரிவு மற்றும் சிறப்புப் படைகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பிரித்தானியா படைகள், உக்ரேனிய சிறப்புப் படைகளுக்கு கிளர்ச்சி எதிர்ப்பு தந்திரங்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் சதிதிட்டங்களை முறியடிப்பது போன்ற திறன்களை கற்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் எல்லைக்கு அருகே நிலைமை சமீபத்திய வாரங்களில் மோசமடைந்துள்ளது.
இதுவரை, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, போலந்து மற்றும் பால்டிக் நாடுகள் உக்ரைனுக்கு பல ஆயுதங்களை வழங்கியுள்ளன.
அதேசமயம், அமெரிக்கா அண்டை நாடுகளான போலந்து மற்றும் ருமேனியாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் தங்களுக்கு இல்லை என ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.