ஆண் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்த பிரித்தானிய இளம்பெண்!
கரன்ஜீத் ஒரு நிமிடத்தில் 42 ஸ்குவாட்லிப்ட் செய்து உலக சாதனை படைத்தார்.
கரன்ஜீத் கவுர் பெயின்ஸ் இதுபோன்ற பல விளையாட்டுக்களில் தன்னை பிரித்தானியாவின் பெயரில் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறார்.
25 வயதான கரன்ஜீத் கவுர் பெயின்ஸ் (Karenjeet Kaur Bains), கின்னஸ் உலக சாதனைகளின்படி, தனது சொந்த உடல் எடைக்கு இணையான பளுவுடன் ஒரு நிமிடத்தில் அதிக ஸ்குவாட்லிப்ட் செய்த பெண் என்ற உலக சாதனை படைத்தார்.
கரன்ஜீத் ஒரு நிமிடத்தில் தனது உடலின் முழு எடையுடன் 42 ஸ்குவாட்லிப்ட் செய்து சாதனை படைத்தார்.
பவர்லிஃப்டிங் சாம்பியனான பெயின்ஸ் 17 வயதில் போட்டியிடத் தொடங்கினார் மற்றும் விளையாட்டில் பல சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார்.
ஆண் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டில் அவர் ஒரு வெற்றிகரமான பெண்வீராங்கனை ஆவார். அதுமட்டுமின்றி, பவர் லிஃப்டிங்கில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் பிரித்தானிய சீக்கிய பெண்மணியும் ஆவார் என்று Guinness World Records தெரிவிக்கிறது.
இது குறித்து கரன்ஜீத் கவுர் பெயின்ஸ் கூறியதாவது, "கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தை வைத்திருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பவர் லிஃப்டிங்கில் கிரேட் பிரிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பிரிட்டிஷ் சீக்கியப் பெண் என்ற பெருமையுடன் மட்டுமல்லாமல், அதிகாரப்பூர்வ உலக சாதனையாளராகவும் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளேன். ஒரு நம்பமுடியாத உணர்வு!" என்று கூறினார்.
சாதனையை முறியடிப்பது "நம்பமுடியாதது" என்று விவரித்த அவர், புதிய தலைமுறையினர் தங்கள் நினைத்தால் எல்லாம் சாத்தியம் என்று நம்புவதற்கு இது ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விளையாட்டு கரன்ஜீத்தின் குடும்பத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது, ஏனெனில் அவரது தந்தை குல்தீப்பும் ஒரு பவர் லிஃப்டராக இருந்தார்.
கரன்ஜீத் கவுர் பெயின்ஸ் இதுபோன்ற பல விளையாட்டுக்களில் தன்னை பிரித்தானியாவின் பெயரில் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறார், இதன்மூலம் நாட்டில் மற்றவர்களுக்கு கதவுகளைத் திறக்க விரும்புகிறார். மேலும், பெண்கள் தங்கள் விளையாட்டு மற்றும் உடற்தகுதியை தீவிரமாக தொடருமாறும் அவர் அறிவுறுத்துகிறார்.