புலம்பெயர்ந்தோர் விவகாரம்... நாடொன்றிற்கு விசா தடைகள் விதித்த பிரித்தானியா
சட்டவிரோத புலம்பெயர் மக்களைத் திரும்பப் பெறத் தவறிய ஒரு நாட்டின் மீது பிரித்தானிய அரசாங்கம் முதல் முறையாக விசா தடைகளை விதித்துள்ளது.
ஒத்துழைக்க மறுத்தால்
பிரித்தானியாவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், காங்கோ ஜனநாயகக் குடியரசு மீது உள்விவகாரச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இதனால், காங்கோ நாட்டின் முதன்மையான அரசியல் தலைவர்களும், அரசாங்க அதிகாரிகளும் பிரித்தானியாவில் சிறப்பு சலுகைகளைப் பெற முடியாது.
மட்டுமின்றி, அந்த நாட்டிற்கான விரைவு விசா செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் ஒத்துழைக்க மறுத்தால், பிரித்தானியாவிற்கான விசா அனுமதிகளை மொத்தமாக முடக்கப்படும்.
இதனிடையே, விசா தடை விதிப்பதாக பிரித்தானியா அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, காங்கோவின் அண்டை நாடுகளான அங்கோலாவும் நமீபியாவும் தங்கள் சட்டவிரோத குடியேறிகளையும் வெளிநாட்டுக் குற்றவாளிகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
திருப்பி அனுப்பப்படுவார்கள்
எந்த நாடும் விதிகளின்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ள உள்விவகாரச் செயலாளர் ஷபானா மஹ்மூத், ஒரு நாட்டின் குடிமகனுக்கு இங்கு இருப்பதற்கு உரிமை இல்லையென்றால், அவர்கள் அவரைத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும்.

அங்கோலா மற்றும் நமீபியாவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன், மேலும் அவர்களின் ஒத்துழைப்பை வரவேற்கிறேன் என்றார். இந்த நிலையில், வெளிவிவகாரச் செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவிக்கையில்,
பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக வருபவர்கள், தங்களின் விசா காலத்தை மீறி தங்குபவர்கள் அல்லது பிரித்தானியாவில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், தாங்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதை எதிர்பார்க்க வேண்டும் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |