பிரித்தானியாவை சூறையாட வரும் கடும் குளிர்! பனிப்பொழிவு மற்றும் சுகாதார எச்சரிக்கை வெளியீடு
பிரித்தானியாவில் கடும் குளிர் தொடர்பான பனிப்பொழிவு எச்சரிக்கை மற்றும் சுகாதார அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா முழுவதும் வானிலை எச்சரிக்கை
பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஆர்க்டிக் துருவப் பகுதிகளில் ஏற்படும் அளவிற்கான கடும் குளிர் தாக்கப்போவதாக வானிலை ஆய்வு மையமும் அந்நாட்டு சுகாதாரத் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
வானிலை தீவிரம் காரணமாக பனிப்பொழிவு, உறைபனி மற்றும் கனமழை ஏற்பட கூடும் என்றும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகமை வெளியிட்ட எச்சரிக்கையில், வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் திங்கட்கிழமை காலை 8 மணி வரை இந்த வானிலை எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை கடுமையாக குறையும் அபாயம் இருப்பதால் வயது முதியவர்கள் மற்றும் நீண்ட கால உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மோசமான வானிலை காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்
வடக்கு இங்கிலாந்தில் உள்ள வடமேற்கு மற்றும் வடகிழக்கு யார்க்ஷயர், மத்திய மற்றும் தெற்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் தென்மேற்கு பகுதிகள் அதிக குளிரால் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வானிலை மையம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வேல்ஸ், மத்திய இங்கிலாந்து மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் கனமழை ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் குளிர் தொடர்பான நோய்களை தவிர்க்க தங்கள் வீடுகளை போதுமான அளவு வெப்பமாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |