பிரித்தானியாவில் புயலால் திடீரென முறிந்து விழுந்த காற்றாலை: உயிர் தப்பிய மக்கள்
பிரித்தானியாவின் சவுத் வேல்ஸ் பகுதியில் சுமார் 20 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள காற்றாலை ஒன்று புயல் காற்று காரணமாக முறிந்து விழுந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுத் வேல்ஸ், பிரிட்ஜென்ட் என்ற பகுதியில் அதிகாலை வீசிய புயல் காற்றால் வயல் பரப்பில் இருந்த காற்றாலை முறிந்து விழுந்துள்ளது.
சுமார் 300 அடி உயரமும், 20 மில்லியன் பவுண்ட் மதிப்பும் கொண்ட காற்றாலை அதிகாலை 7 மணிக்கு புயல் காற்று காரணமாக சரிந்து விழுந்தது, பெரிய இடி முழக்கம் போல் இருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து அந்த காற்றாலை உற்பத்தியாளரான நார்டெஸின் தகவல் தொடர்பாளர் தெரிவிக்கையில், N90/2500 என்ற காற்றாலை திங்கள்கிழமை காலை சரிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து நார்டெஸின் நிபுணர்கள் குழு, வயலின் உரிமையாளர் மற்றும் காற்றாலையை சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை நடத்தி வருவதாகவும், விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
29 காற்றாலைகள் கொண்ட இந்த வயலில், விபத்துக்குள்ளான காற்றாலையுடன் சேர்த்து 21 காற்றாலைகள் 2013 ஆம் ஆண்டு முதல் இயங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.